/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திடக்கழிவு மேலாண்மை மாநகராட்சி தீவிரம்
/
திடக்கழிவு மேலாண்மை மாநகராட்சி தீவிரம்
ADDED : அக் 26, 2025 02:59 AM
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அகற்றப்படும் குப்பைகள் பாறைக்குழிகளில் கொண்டு சென்று கொட்டப்பட்டு வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. மேலும், இதற்கு தடை விதிக்க கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பைகள் கொட்ட தடை விதித்தார். மேலும், திடக்கழிவு மேலாண்மையில் சில நடைமுறைகளை மாநகராட்சி மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். அதனடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதுகுறித்த சிறப்பு மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில், முதலிபாளையம் மற்றும் நல்லுார் கிராமங்களில் மொத்தம் 17.43 ஏக்கர் நிலம் தனியார் வசமிருந்து மாநகராட்சி விலைக்கு வாங்கி திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. மேற்படி நிலம் அமைந்துள்ள பகுதியில் 100 மீ., சுற்றளவுக்கு வளர்ச்சி மற்றும் கட்டுமானத் தடை மண்டலமாக அறிவிக்க, அரசிதழில் வெளியிட தீர்மானிக்கப்பட்டது. மேலும் நல்லுார், முதலிபாளையம் பகுதியில் உத்தேசிக்கப்பட்டுள்ள தனியார் நிலம், இடுவாய் பகுதியில் மாநகராட்சிக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலம் ஆகிய இடங்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி இடங்களில் கோர்ட் வழிகாட்டுதலின் படி உரிய சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி பெறுவற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.இந்த தீர்மானங்கள் மன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, நிர்வாகரீதியாக இவற்றை பெற்று அடுத்த கட்ட நகர்வை நோக்கிப் பயணிக்கும் வகையில் மாநகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.அரசிதழில் வெளியிடுவதற்காக வரைவு தயார் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. நாளை உரிய நடைமுறைகளின்படி சமர்ப்பிக்கப்படும். நடப்பு வார அரசிதழில் வெளியாக வாய்ப்பிருப்பின் அதில் சேர்க்கப்படும் அல்லது சிறப்பு அரசிதழில் வெளியிடப்படும் என மாநகராட்சி கமிஷனர் அமித் தெரிவித்தார்.
தனியார் கைகோர்ப்பு
திருப்பூர் மாநகராட்சி பகுதியில், குப்பை கொட்ட இடமில்லாத நிலையில், காலாவதியான பாறைக்குழிகளில் தான் குப்பை கொட்டப்படுகிறது.
மாநில அளவில் குப்பை பிரச்னைக்கு தீர்வு காணவும், இப்பணியில் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு இணைப்பு பாலமாக இருந்து செயல்படும் நோக்கிலும் 'கழிவு மேலாண்மை மன்றம்' துவங்கப்பட்டுள்ளது. மாநில அளவில் நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளை மன்ற நிர்வாகிகள் சந்தித்து, குப்பை மேலாண்மை குறித்த தங்களின் பணியை விளக்கி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தொழில் துறையினரின் ஒத்துழைப்புடன், தனியார் வாயிலாக குப்பை தரம் பிரித்து அப்புறப்படுத்தும் பணி திருப்பூர் அருகேயுள்ள பொங்குபாளையத்தில், அடுத்த மாதம், 5ம் தேதி நடக்கிறது.மேயர் தினேஷ்குமார், கமிஷனர் அமித், நகராட்சிகளின் மண்டல இயக்குனர் ராஜாராம், மாசுக்கட்டுப்பாடு வாரிய மண்டல செயற் பொறியாளர் பாரதிராஜா, நகராட்சி நிர்வாக தலைமை பொறியாளர் (ஓய்வு) முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

