/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திடக்கழிவு மேலாண் விதி; மாநகராட்சிக்கு அறிவுரை
/
திடக்கழிவு மேலாண் விதி; மாநகராட்சிக்கு அறிவுரை
ADDED : மே 31, 2025 05:12 AM
திருப்பூர்; 'பொங்குபாளையம் ஊராட்சி, காளம்பாளையத்தில் உள்ள பாறைக்குழியில், குப்பை கொட்டப்படும் விவகாரத்தில், திடக்கழிவு மேலாண்மை விதியை முறையாக பின்பற்றுமாறு, மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில், திருப்பூர் மாநகராட்சிக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது' என, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கு, மாநகராட்சிக்கு போதிய இடம் இல்லாத நிலையில், ஆங்காங்கே உள்ள பாறைக்குழியில் தான் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அதன்படி, பொங்குபாளையம் ஊராட்சி, காளப்பாளையத்தில் உள்ள பாறைக்குழியில் குப்பைகள் கொட்டப்பட்டன.
இதற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அங்கு குப்பை கொட்டுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.'இதுதொடர்பாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக விவசாயிகள் சங்கத்தின் சட்ட விழிப்புணர்வு பிரிவு மாநில செயலாளர் சதீஷ்குமார், மாசுக்கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு புகார் மனு அனுப்பினார்.
சுற்றுச்சூழல் பொறியாளர் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், 'பொங்குபாளையம், பாறைக்குழியில் திருப்பூர் மாநகராட்சி மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஒப்பந்ததாரர்கள் முறைகேடாக, முறையாக பிரிக்கப்படாத குப்பைகளை கொட்டுவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதுடன், நிலத்தடி நீர் மற்றும் பல்லுயிர் சூழல் மாசு அடைவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதி, 2016ஐ, முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.