/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுங்க வரி சார் பிரச்னைக்கு தீர்வு; 'துணைவன்' இனி உறுதுணை
/
சுங்க வரி சார் பிரச்னைக்கு தீர்வு; 'துணைவன்' இனி உறுதுணை
சுங்க வரி சார் பிரச்னைக்கு தீர்வு; 'துணைவன்' இனி உறுதுணை
சுங்க வரி சார் பிரச்னைக்கு தீர்வு; 'துணைவன்' இனி உறுதுணை
ADDED : ஜூன் 14, 2025 11:09 PM

திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடை ரகங்கள், ஐரோப்பா, அமெரிக்கா, அரபு நாடுகள் என உலகளாவிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
ஆடை ரகங்களை விமானம், கப்பல் வாயிலாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான அனுமதி, மத்திய அரசிடமிருந்து ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., உள்பட சலுகைகளை பெறுவதற்கு, ஏற்றுமதியாளர்கள், சுங்கவரித்துறையை நாடுகின்றனர்.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள், சுங்க வரித்துறை சார்ந்த பிரச்னைகளை, அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, விரைவான தீர்வு காண, நெறிப்படுத்தப்பட்ட குறைகேட்பு கட்டமைப்பு வசதிகள் தற்போது இல்லை.
இதனால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், சுங்க வரித்துறை சார்ந்த பிரச்னைகளை சரிசெய்ய காலதாமதம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் விதமாக, திருச்சி சுங்க வரித்துறை கமிஷனரகமும், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலும் (ஏ.இ.பி.சி.,) இணைந்து, 'துணைவன்' என்கிற புதிய இணையதள சேவை துவங்கப்பட்டுள்ளது.
எளிய சேவை
ஏ.இ.பி.சி.,-ன் தொழில்நுட்ப பிரிவு உருவாக்கியுள்ள இந்த சேவை, தற்போது முழு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. https://thunaivan.co.in/ என்கிற லிங்க் வாயிலாக, கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன் மூலம் இச்சேவையை பயன்படுத்தலாம்.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் முதல்முறை பயன்படுத்தும்போது, தங்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். உரிமையாளர் அல்லது பங்குதாரரின் முழுமையான பெயர், ஆதார் எண், மொபைல் எண், இ-மெயில் முகவரி, நிறுவனத்தின் பெயர், முகவரி, பான், ஜி.எஸ்.டி., எண், ஏற்றுமதி - இறக்குமதி பதிவெண் (ஐ.இ., கோர்டு), ஏற்றுமதி செய்யும் பொருள் விவரங்கள் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை அளித்து, பதிவு செய்யவேண்டும்.
புகார் பதிவிட...
சுங்க வரித்துறை சார்ந்து பிரச்னைகள் ஏற்படும்போது, இணையதளத்தில் 'லாக்-இன்' செய்து நுழைய வேண்டும். புதிய புகார் பிரிவை தேர்வு செய்யும்போது, டிஜிட்டல் படிவம் தோன்றும். அதில், வெளிநாட்டுக்கு அனுப்பிய அல்லது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த சரக்கு குறித்த விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்யவேண்டும். குறிப்பிட்ட சரக்கு சார்ந்து எதிர்கொள்ளும் பிரச்னை, ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., - ரீபண்ட், டியூட்டி டிராபேக் பெறுவதில் பிரச்னையா, வேறு ஏதேனும் பிரச்னையா என, தேர்வு செய்து வழங்க வேண்டும்.
பிரச்னை தொடர்பான விவரங்களை சுருக்கமாக, எழுத்து வடிவில் 'டைப்' செய்யலாம். தேவையான ஆவணங்களை, பி.டி.எப்., - டாக்குமென்ட், போட்டோவாக பதிவேற்றம் செய்தால்போதும், வெற்றிகரமாக புகார் பதிவாகி விடும்.
ஏற்றுமதி, இறக்குமதியாளர் பதிவு செய்யும் புகார் விவரங்கள், கண நேரத்தில், சுங்க வரித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, பிரச்னைக்கு தீர்வு காணப்படும். தங்கள் புகாரின் தற்போதைய நிலை குறித்தும் இணையதளம் மூலம் ஏற்றுமதியாளர்கள் மிக சுலபமாக தெரிந்துகொள்ளலாம்.
ஜென் ஏ.ஐ., அளிக்கும் தீர்வு
'துணைவன்' இணையதளத்தில், 'ஜென் ஏ.ஐ.,' என்ற தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் பதிவு செய்யப்படும் புகார்கள், அதிகாரிகள் அளிக்கும் தீர்வு சார்ந்த தரவுகளை பெற்று, ஏ.ஐ., கற்றுக்கொள்ளும். அதனடிப்படையில், ஏற்றுமதி, இறக்குமதியாளர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு, நொடிப்பொழுதில் 'ஏ.ஐ.' பதிலளித்துவிடும்; தேவையான வழிகாட்டுதல்களையும் வழங்கும். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், 'துணைவன்' செயலி வாயிலாக, சுங்க வரித்துறை சார்ந்த புகார்களை பதிவு செய்து, விரைவான தீர்வு பெற வேண்டும்.
- அபிநந்தன், தொழில்நுட்ப பிரிவு
பொது மேலாளர் (ஏ.இ.பி.சி.,)
பிரத்யேக வசதி
பதிவு செய்யப்படும் புகார்களை, சுங்க வரித்துறை அதிகாரிகள், காலதாமதம் செய்யாமலும், தட்டிக்கழிக்காமல், விரைந்து தீர்வு காணவேண்டும் என்பதற்காக, இந்த இணையதளத்தில் பிரத்யேக வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
புகார் பதிவு செய்யப்பட்டு, 14 நாட்களுக்குள் தீர்வு காணப்படவில்லை என்றால், அது தானாகவே சுங்க வரித்துறை இணை அல்லது கூடுதல் கமிஷனரின் நேரடி பார்வைக்கு சென்றுவிடும். 21 நாட்களாகியும் நிலுவையில் இருந்தால், சுங்கவரித்துறை கமிஷனருக்கு அனுப்பப்பட்டுவிடும். 30 நாட்களாகியும் பிரச்னை தீர்க்கப்படாத பட்சத்தில், அந்த புகார், தலைமை கமிஷனரை சென்றடையும்.