ADDED : அக் 01, 2024 12:12 AM

குடிநீர் சப்ளை: கவுன்சிலர் மனு
திருப்பூர், 24வது வார்டு பகுதிக்கு, 4வது குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க கவுன்சிலர் நாகராஜன், கமிஷனர் பவன்குமாரிடம் அளித்த மனுவில், 'திருப்பூர் மாநகராட்சியில், 4 வது குடிநீர் திட்ட குழாய் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இத்திட்டத்தின்படி தாய் மூகாம்பிகை காலனி டேங்கில் இருந்து குடிநீர் வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால், டேங்க் கட்டப்படாமல் உள்ளது. எனவே, திருஆவினன்குடி டேங்கில் இருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று கூறப்பட்டிருந்தது.
கோரிக்கை விளக்க கூட்டம்
திருப்பூர் காங்கயம் ரோடு, அரசு போக்குவரத்து கழக டிப்போ கிளை முன், கோரிக்கை விளக்க கூட்டம் நேற்று மாலை நடந்தது. அரசு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - எம்.எல்.எப்., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில், கோரிக்கை விளக்க கூட்டம் நடந்தது. கடந்த, 2003ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளிக்கு பழைய ஓய்வூதிய திட்ட அடிப்படையில், ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு, தாமதமின்றி ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கை குறித்து, நிர்வாகிகள் விளக்கி பேசினர்.
தேசிய தொழிலாளர் தின விழா
திருப்பூர் மாவட்ட பி.எம்.எஸ்., சார்பில், ஸ்ரீ விஸ்வகர்மா தேசிய தொழிலாளர் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்டத் தலைவர் லட்சுமி நாராயணன் தலைமையில் மாவட்டம் முழுவதும், 30 இடங்களில் கொடியேற்றப்பட்டது. மாவட்ட செயல் தலைவர் செந்தில், செயலாளர் மாதவன், பொருளாளர் சீனிவாசன், மாவட்ட கட்டுமான சங்க தலைவர் செல்வம், துணை தலைவர் சண்முகம், செயலாளர் தமிழ் செல்வம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொழிற்சங்கம் துவக்க விழா
முக்குலத்தோர் தேசிய கழக மோட்டார் தொழிற்சங்கம் துவக்க விழா மற்றும் செயற்குழு கூட்டம் திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் நிறுவன தலைவர் ராஜா தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் விஜய கண்ணன், மோட்டார் தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஜனா, பொதுசெயலாளர் வீரமணி உட்பட பலர் பங்கேற்றனர். புதிய நிர்வாகிகள் இணைப்பு குறித்து பேசினர். பைக் டாக்ஸி தடை செய்ய வேண்டும், ஆட்டோவுக்காக தனி ஆப், ஆட்டோ டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவி, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வீணாகும் உடற்பயிற்சி கூடம்
பொங்கலுார் அருகே அவிநாசிபாளையத்தில் அம்மா உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள், பெரியவர்களுக்கு உபயோகமாக இருந்து வந்தது. சமீப காலமாக அம்மா உடற்பயிற்சி கூடம் சரிவர பராமரிக்காமல், புல், பூண்டுகள், முட்செடிகள் வளர்ந்து நிற்கிறது. பாம்புகள் மறைந்திருந்தாலும் தெரியாத அளவு புற்கள் வளர்ந்துள்ளன. இதனால், குழந்தைகளை அழைத்துச் செல்ல பெற்றோர் தயங்குகின்றனர். எனவே, அம்மா உடற்பயிற்சி கூடத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.