ADDED : அக் 16, 2024 12:31 AM

15 டன் குப்பை அகற்றம்
காங்கயம் நகராட்சி பகுதியில், ஆயுதபூஜைக்கு தற்காலிக கடைகள் ரோட்டோரங்களில் அமைத்து விற்பனை நடைபெற்றது. இவற்றில் விற்பனையாகாமல் தேங்கிய மாவிலை, வாழைக் கன்றுகளை வியாபாரிகள் அதே இடத்தில் விட்டுச் சென்றுவிட்டனர். இதுதுவிர, ஆயுத பூஜைக்கு கடைகள் மற்றும் நிறுவனங்களல் சுத்தம் செய்த போது வெளியேற்றி குப்பைகளும் ரோட்டில் குவிந்தது. பூஜை முடிந்த பின் மேலும் அதிகளவில் கழிவுகள் சேர்ந்தது. அவ்வகையில், ஏறத்தாழ 15 டன் அளவு குப்பைகளை, துாய்மை பணியாளர்கள் அகற்றினர்.
மருத்துவமனை திறக்கலாமே! (படம்)
வேலம்பாளையம் நகர மா.கம்யூ., கிளை மாநாடு, நகர குழு உறுப்பினர் நவபாலன் தலைமையில் நடைபெற்றது. வகித்தார். வரவேற்பு குழு செயலாளர் வீரமுத்து வரவேற்றார். மாநில குழு உறுப்பினர் காமராஜ், சாவித்திரி, ரங்கராஜ், ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். வேலம்பாளையத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனையை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பாத்திர தொழிலாளருக்கு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சுமைப்பணியாளர் ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும், 43 'டாஸ்மாக்' குடோன்களில், 2,500க்கும் மேற்பட்ட சுமை துாக்கும் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். தொழிலாளர்களுக்கு அரசு விதிகளின்படி போனஸ் வழங்க வலியுறுத்தி, நேற்று மாநிலம் முழுவதும், 'டாஸ்மாக்' குடோன் முன் சி.ஐ.டி.யு., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அவ்வகையில், காங்கயத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் திருவேங்கடசாமி, வாலிபர் சங்க நிர்வாகி தங்கவேல் பேசினர். இதில், கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளர்கள் கோஷமிட்டனர்.
நாய்களால் மக்கள் அச்சம்
காங்கயம் மற்றும் சுற்றுப் பகுதியில் தெருநாய்கள் தொல்லையும், எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாய்களால்,தொல்லைகள் அதிகரித்து தெருவில் மக்கள்நடமாட அச்சப்படுகின்றனர். திருப்பூர் ரோட்டில், திருவள்ளுவர் நகர் உட்பட பல பகுதிகளில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகிறது. எனவே, நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிலக்கடலை ஏலம்
சேவூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த ஏலத்தில், 55.60 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது. ஏலத்துக்கு சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 260 விவசாயிகள், 1,790 மூட்டைகள் நிலக்கடலையை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். இதில், முதல் ரகம், 7,650 - 8,250, இரண்டாம் ரகம், 7,050 - 7,600 மற்றும் மூன்றாம் ரகம், 6,410 - 7,000 ரூபாய் வரையிலும் விலைக்கு போனது. இந்த வார ஏலத்தில், மொத்தமாக, 95 மெட்ரிக் டன் நிலக்கடலை, 55.60 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
பள்ளியில் கண்காணிப்பு குழு
துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து, கடந்த, 6ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது; 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறந்த உடன், மாணவர்களின் தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, ஆசிரியர்கள் வழங்கினர். காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா, சரியாக திருத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு அமைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து, கடந்த, 6ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது; 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறந்த உடன், மாணவர்களின் தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, ஆசிரியர்கள் வழங்கினர். காலாண்டு தேர்வு விடைத்தாள்கள் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா, சரியாக திருத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு அமைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.