
சாலையில் தேங்கிய கழிவுநீர் (படம்)
திருப்பூர் அருகேயுள்ள காவிலிபாளையத்தில் இருந்து, கணியாம்பூண்டி மற்றும் சோளிபாளையம் செல்லும் சாலையில் தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். சாலையோரம் மழைநீர் வடிகால் இல்லாததால், மழைநீரும், சாக்கடை நீரும் மக்கள் நடந்து செல்லும் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. கட்டமைப்பு பணியில் கவனம் செலுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
3 நாளில், 4,000 பேர் 'விசிட்!'
திருப்பூர் ஆண்டிப்பாளையம் படகு இல்லத்திற்கு, 3 நாளில், 4,000 பேர் பார்வையாளர்களாக வந்து சென்றுள்ளனர்; படகு சவாரி வாயிலாக, 1.50 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது.திருப்பூர் ஆண்டிப்பாளையம் குளத்தில், சுற்றுலா துறை சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டு, படகு சவாரி துவங்கப்பட்டது. முதன் முறையாக, நேற்று முன்தினம், சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழாவும் நடத்தப்பட்டது. பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஏராளமானோர் பங்கேற்றனர். 'கடந்த மூன்று நாளில், 4,000 பேர் பார்வையாளர்களாக வந்துள்ளனர்; படகு சவாரி வாயிலாக, 1.50 லட்சம் ரூபாய் வசூலானது,' என, சுற்றுலா துறை தெரிவித்துள்ளது.
2 நாள் பெங்களூரு ரயில் ரத்து
நிர்வாக காரணங்களுக்காக பெங்களூரு வாராந்திர ரயில் இயக்கம் இரண்டு நாட்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்தோறும் கொச்சுவேலியில் இருந்து பெங்களூருவுக்கு வாராந்திர ரயில் (எண்: 06083) இயக்கப்பட்டு வருகிறது. கோவை செல்லாமல், போத்தனுார் வழியாக அதிகாலை, 3:17 மணிக்கு திருப்பூர் வரும் இந்த ரயில், காலை, 10:55 மணிக்கு பெங்களூரு சென்றடையும். தவிர்க்க இயலாத நிர்வாக காரணங்களால் இந்த ரயிலின் இயக்கம் வரும், 21 மற்றும், 28ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக பெங்களூரு - கொச்சுவேலி ரயில் (எண்: 06084) வரும், 22 மற்றும், 29ம் தேதி இயங்காதென, தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பொங்கல் விளையாட்டு விழா
திருப்பூர், அவிநாசி ரோடு, காந்தி நகர், ஏ.வி.பி., லே அவுட் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், 8 வது ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. முன்னதாக சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. சங்க தலைவர் துரை தலைமை வகித்தார். சங்க செயலாளர் வெள்ளியங்கிரி மற்றும் நிர்வாகிகள் பிரபு, நடராஜன், பழனிசாமி, செந்தில் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து குடியிருப்பு பகுதியினர் கலந்து கொண்ட விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுஜாதா, கவுன்சிலர்கள் நாகராஜ், சாந்தி ஆகியோர், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தனர்.
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா (படம்)
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவையொட்டி, அவிநாசி தெற்கு ஒன்றியம் சார்பில், வேலாயுதம்பாளையத்தில், ஊராட்சியில் ஒன்றிய அவை தலைவர் சுப்ரமணியன் தலைமையில், எம்.ஜி.ஆர்., படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றிய பொருளாளர் காவேரி ரமேஷ், வேல்முருகன், தினேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கலந்து கொண்டனர். அவிநாசி நகர அ.தி.மு.க., சார்பில், புதிய பஸ் ஸ்டாண்டில் நடந்த விழாவில், நகர பொறுப்பாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். துணை செயலாளர் மூர்த்தி, சார்பு அணி செயலாளர்கள் கோகுல், மோகன், வக்கீல் சுதர்சன், நகராட்சி கவுன்சிலர்கள் கவிதா, சாந்தி, தேவி உட்பட பலர் பங்கேற்றனர். அவிநாசி, கருவலுாரில் நடந்த விழாவில், காத்தவராயன், திரிபுரசுந்தரன்,சிவக்குமார், ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.