/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சில வரி செய்திகள்... திருப்பூர்
/
சில வரி செய்திகள்... திருப்பூர்
ADDED : மே 18, 2025 12:14 AM

அ.தி.மு.க.,வினர் பிரசாரம்
திருப்பூர் மாநகர் மாவட்ட ஜெ. பேரவை சார்பில், தி.மு.க அரசை கண்டித்து திண்ணை பிரசாரம் வளையங்காடு எம்.ஜி.ஆர் திடலில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, மாநகர் மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் லோகநாதன், தலைமை வகித்தார். வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து, தி.மு.க., அரசின் விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தை பொது மக்களிடம் வழங்கினர். மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, நிர்வாகிகள் கருணாகரன், நாச்சிமுத்து, ஹரிஹர சுதன், கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அரசு ஆண்கள் பள்ளி அபாரம்
அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில், 89 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்தனர். இந்தாண்டு, 97 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்தாண்டு, 91 சதவீதம் தேர்ச்சி கிடைத்தது. இந்தாண்டு, 97 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. கடந்தாண்டை விட கூடுதலாக தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி வளர்ச்சிக்குழுவினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மாணவனுக்கு நிதி உதவி (படம்)
பிளஸ் 2 தேர்வில், பல்லடம் கண்ணம்மாள் பள்ளி மாணவர் ராகுல், 599 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பிடித்தார். இதனையடுத்து, பல்லடம் அனைத்து வன்னியர் சங்க பேரமைப்பு சார்பில், ராகுலுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சிக்கு, பல்லடம் அனைத்து வணிகர் சங்க தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் லாலா கணேசன், மாநகர மாவட்டத் தலைவர் ஜான் வர்கீஸ், மாவட்ட ஆலோசகர் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் செல்வராஜ், குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஹேமலதா முன்னிலையில், மாணவர் ராகுலின் பெற்றோரிடம் நிதி உதவி வழங்கப்பட்டது.
மரத்தில் விளம்பர பலகை
காங்கயம் - ஈரோடு நெடுஞ்சாலையில், ரோட்டோர மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகைகளை வைத்துள்ளனர். காங்கயத்திலிருந்து, வாய்க்கால் மேடு, நத்தக்காடையூர் பகுதி சாலையோர மரங்களில், தனியார் நிறுவனங்கள், விளம்பர பலகைகளை வைத்துள்ளன. பெரும்பாலானோர் மரங்களில் ஆணி அடித்து, விளம்பர பலகைகளை வைத்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறையோ எதையும் கண்டுகொள்ளவில்லை. இதனால், மரங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதையடுத்து, விளம்பர பலகைகளை அகற்றி, மரத்தில் ஆணி அடித்து சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரயிலில் வந்த கஞ்சா பறிமுதல்
டாடாநகர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு 8:15 மணியளவில் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தபோது, சிறப்பு எஸ்.ஐ., ராமமூர்த்தி தலைமையிலான போலீசார், ரயில் பெட்டிகளை சோதனையிட்டனர். ரயிலின் பின்புறம் பொது பெட்டியில் சோதனையிட்டபோது, கேட்பாரற்று ஒருமூட்டை கிடந்தது. அதை திறந்து பார்த்தபோது, 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை கொண்டுவந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. கஞ்சாவை பறிமுதல் செய்த கஞ்சா தடுப்பு பிரிவு சிறப்பு போலீசார், விசாரணை நடத்திவருகின்றனர்.