
பொங்கல் விழா உற்சாகம்
பல்லடம் அருகே பருவாய் சுவாமி விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில், சுவாமி விவேகானந்தர் திடலில், பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தன. முன்னதாக, பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. அதன்பின், ஓட்டப்பந்தயம், சாக்கு போட்டி, லெமன் ஸ்பூன், கால்பந்து, கோ கோ, கபடி உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
கவுசிகா நதிக்கரையில் விழா
பனை காக்கும் நண்பர்கள் குழு சார்பில் நேற்று மாட்டுப் பொங்கல் முன்னிட்டு, மங்கலம் அருகே கவுசிகா நதிக்கரையில் பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. குழு ஒருங்கிணைப்பாளர் முருகேஷ் தலைமையில், குழு நிர்வாகிகள், முத்து, பாரதி, சக்திவேல்,சுப்பரமணியம், சுதாகர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்றனர். கவுசிகா நதிக்கரையில், அடுப்பு மூட்டி, பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து, நீர் நிலை சூரிய பகவான், மாடு ஆகியவற்றுக்கு இவற்றை படைத்து, வழிபாடு செய்தனர்.
பள்ளி ஆண்டு விழா
திருப்பூர் அருகே நெருப்பெரிச்சல் திருமுருகன் மெட்ரிக் பள்ளியின், 17வது ஆண்டு விழா நடைபெற்றது. திருமுருகன் குழும தலைவர் மோகன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் சுதா ஆண்டறிக்கை வாசித்தார். ஒருங்கிணைப்பாளர் உதயகலா வரவேற்றார். திருமுருகன் ரியல் எஸ்டேட் முருகன், திருநீலகண்டன், மனோகர் முன்னிலை வகித்தனர். நகைச்சுவை நடிகர் இமான், ஆயுர்வேத எலும்பு மற்றும் நரம்பியல் மருத்துவர் சுந்தர் பரமார்த்த லிங்கம், ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினர்.
சிறுவர் விளையாட்டு விழா
பல்லடம், கே.என்., புரம், லட்சுமி மில்ஸ் பகுதியில், அப்துல் கலாம் நினைவு, 9ம் ஆண்டு பொங்கல் விழா, விளையாட்டு விழா, சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நடந்தன. பேச்சுப்போட்டி, கவிதை, கட்டுரை, ஓவியம், பாட்டு கபடி, ஓட்டம், கோலம், மினி மராத்தான், வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற சிறுவர் சிறுமியருக்கு, பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டன. பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.