
தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், விவசாய தொழிலாளர்கள் மற்றும் 100 நாள் வேலை தொழிலாளரின் கோரிக்கை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் கோபால் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாக குழு சண்முகம், ஒன்றிய செயலாளர் முத்து சாமி, ராமச்சந்திரன், புறநகர் மாவட்ட துணை செயலாளர் மோகன், சுப்பிரமணியம், ஷாஜகான், நிவேதா, சித்ரா உட்பட பலர் பங்கேற்றார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.
மனு அளித்த விவசாயிகள்
ஏர்முனை இளைஞர் அணி மாநில தலைவர் வெற்றி தலைமையில் வேளாண் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, வேளாண்துறை இயக்குனர் சுப்பிரமணியன், தோட்டக்கலைத்துறை இயக்குனர் பிருந்தாதேவி ஆகியோரிடம் சென்னையில் சந்தித்து மனு அளித்தனர். அதில், 'தென்னையில் வெள்ளை ஈக்கள் மற்றும் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலால் மகசூல் குறைகிறது. அரசு காய்கறி நாற்று வழங்குவதற்கு பதிலாக பின்னேற்பு மானியம் வழங்க வேண்டும்,' குறிப்பிட்டுள்ளார்.
அன்னதானம் வழங்கல்
திருப்பூர் ஒன்றிய பா.ஜ., சார்பில், அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காளிபாளையம் ஊராட்சி, புதுப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ அனுமந்தராயர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. அதன்பின், சக்தி பூஜை, கோ பூஜை, பஜனை ஆகியனவும் நடைபெற்றது. நிகழ்ச்சியில், பெண்கள் உட்பட 500 க்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஸ்ரீ ராமருக்கு சிறப்பு பூஜை
அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பூர் வித்யா மந்திர் பள்ளியில், ஸ்ரீராமர் படம் வைத்து அலங்கரித்து பூஜை செய்யப்பட்டது. பள்ளி தாளாளர் ஜெயந்திமாலா திருவிளக்கு ஏற்றி வைத்து மலர்கள் துாவி தீபாராதனை காண்பித்தார். பள்ளி முதல்வர் ராஜ்குமார் அயோத்தியில், ஸ்ரீ ராமர்கோவில் எழுப்பபட்ட வரலாற்றையும், ராமரின் வரலாற்றையும் மாணவ, மாணவியருக்கு விளக்கினார். இறுதியாக அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு பூஜை இனிதே நிறைவு பெற்றது.
ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
'பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், 4ஜி, 5ஜி சேவை துவங்க வேண்டும். சொத்துக்களை விற்பனை செய்யக் கூடாது; ஊதிய மாற்ற பிரச்னையை பேசி முடித்து குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்,' என்பது உட்பட கோரிக்கையை வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில், திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் மாநில உதவி செயலர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். கிளை தலைவர் குமரவேல் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள், பழனிவேல்சாமி, விஸ்வநாதன், சவுந்திரபாண்டியன் உட்பட பலர் பேசினர்.