ADDED : அக் 27, 2025 11:12 PM

திருப்பூர்: பக்தர்களின் 'அரோகரா' கோஷத்துடன், சக்திவேலுடன் புறப்பட்டு சென்ற சுப்பிரமணியர், சூரனை சம்ஹாரம் செய்து, வெற்றி வேலாயுதமாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கந்த சஷ்டி விழா, கடந்த 22ம் தேதி, காப்பு அணியும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவில், மலைக்கோவில் குழந்தை வேலாயுத சுவாமி கோவில், சிவன்மலை சுப்பிரமணியர் கோவில் உட்பட அனைத்து முருகர் கோவில்களிலும் கந்த சஷ்டி விழா விமரிசையாக நடந்தது.
கடந்த ஆறு நாட்களாக, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் வீரபாகு ஆகியோருக்கு மஹா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. காப்பு அணிந்த பக்தர்கள், கடந்த ஆறு நாட்களாக விரதம் இருந்து, முருகப்பெருமானை வழிபட்டு வந்தனர். ஆறாவது நாளான நேற்று, அனைத்து கோவில்களிலும் சூரசம்ஹார விழா எழுச்சியுடன் நடைபெற்றது.
நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், வெள்ளி கவசத்துடன் எழுந்தருளிய முருகப் பெருமான், வீரபாகுவுடன் சென்று, அசுரர்களை சம்ஹாரம் செய்தார். கஜமுகாசுரன், சிங்கமுகாசுரன், பானு கோபன், சூரபத்மன் ஆகியோரின் தலையை கொய்து, வதம் செய்தார். பக்தர்கள், கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்து வழிபட்டனர்.
திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சக்திவேலுடன், வீரபாகு சகிதமாக புறப்பட்ட சுப்பிரமணியர், நான்கு சூரன்களையும் வதம் செய்து, அருள் பாலித்தார். வீரபாகுவும், அசுரர் சப்பரங்கள், வேகமாக மோதுவது போல், முன்னும், பின்னுமாக பேர்க்களமாடியது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
சஷ்டி விரதம் இருந்த பக்தர்களுக்கு மோரில் ஊறவைத்த வாழைத்தண்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.
கோவிலுக்கு திரும்பிய முருகப் பெருமானுக்கு, யாக சாலையில் இருந்த தீர்த்தம் கொண்டு சிவாச்சாரியார்கள் மகா அபிஷேகம் செய்தனர்; சாந்தப்படுத்தும் வகையில், சந்தன காப்பு அணிவிக்கப்பட்டது.
இன்று காலை சந்தன காப்பு களைந்து, ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்பிரமணியருக்கு மகாபிஷேகமும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும்.

