திருப்பூர்; 'அரையாண்டு தேர்வு முடிந்து இன்று முதல் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், கூட்ட நெரிசலுக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்,' என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம், 9ம் தேதி துவங்கிய அரையாண்டு தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை அரசு பள்ளிகள், தனியார், மெட்ரிக் பள்ளிகள் அனைத்துக்கும் இன்று முதல் வரும் ஜன., 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை கிறிஸ்துமஸ், 9 நாள் பள்ளிகள் விடுமுறை, அடுத்த வாரம் புத்தாண்டு என்பதால் பலரும் வெளியூர் பயணிக்க வாய்ப்புள்ளதால், தேவைக்கேற்ப சிறப்பு பஸ் இயக்க போக்குவரத்து கழகம் ஆலோசித்துள்ளது.
திருப்பூர் மண்டல போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'வாராந்திர சிறப்பு பஸ்களாக இயக்கப்படும் பஸ்கள், டிப்போக்களில் தயாராக உள்ளது. பயணிகள் எண்ணிக்கை பஸ் ஸ்டாண்டில் அதிகரித்தால், அதற்கேற்ப சிறப்பு பஸ் இயக்கப்படும். மற்றபடி வழக்கமான பஸ் இயக்கம் தொடரும்,' என்றனர்.