/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறப்பு முகாம்: மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றம்! மனு பெற அலுவலர்கள் இல்லை
/
சிறப்பு முகாம்: மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றம்! மனு பெற அலுவலர்கள் இல்லை
சிறப்பு முகாம்: மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றம்! மனு பெற அலுவலர்கள் இல்லை
சிறப்பு முகாம்: மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றம்! மனு பெற அலுவலர்கள் இல்லை
ADDED : ஜூலை 16, 2025 08:44 PM

உடுமலை; பள்ளபாளையத்தில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில், மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில், அலுவலர்கள் வராததால், கோரிக்கை மனுக்களை வழங்க முடியாமல், மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றமடைந்தனர்.
தமிழக அரசு, மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து, 45 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களை நடத்த துவங்கியுள்ளது.
இந்த முகாமில், அரசுத்துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே இடத்தில் மக்கள் மனுக்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.
அவ்வகையில், திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளபாளையம் ஊராட்சி மக்களுக்கான முகாம், நேற்று ஆலாம்பாளையம் பிரிவில் நடந்தது. முகாமில், மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க நுாற்றுக்கணக்கான பெண்கள், காலை முதலே திரண்டனர்.
ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, கால்நடைத்துறை, சுகாதாரத்துறை, வேளாண், தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் முகாமில் பங்கேற்று மனுக்களை பெற்றனர்.
முகாம் வந்தவர்களுக்கு, நுழைவாயிலில், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட துறையினரிடம் சமர்ப்பிக்க, வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. ஆனால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மனுக்களை பெற அதிகாரிகள் வரவில்லை.
இத்துறையின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை, பராமரிப்பு உதவித்தொகை, சுயதொழில் கடனுதவி, பெட்ரோல் ஸ்கூட்டர், சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி, செயற்கைகால், காது கேட்கும் கருவி இதர உதவி உபகரணங்கள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், பள்ளபாளையம் ஊராட்சிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள், தங்கள் கிராமத்திலேயே நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என உதவியாளர்களுடன் முகாமுக்கு வந்திருந்தனர். அங்கு துறை அலுவலர்கள் இல்லாததால், ஏமாற்றமடைந்தனர்.
மாற்றுத்திறனாளிகளிடம், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்புவதாக தெரிவித்தனர்.
பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் துவக்கப்பட்ட முகாமில், மாற்றுத்திறனாளிகள் மட்டும் புறக்கணிக்கப்பட்டது வேதனையளிப்பதாக அங்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.
இனி நடக்கும் முகாம்களில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்களை அனுப்ப திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.