/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர் முறைகேடு; சிறப்புக்குழுவினர் இன்று விசாரணை
/
மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர் முறைகேடு; சிறப்புக்குழுவினர் இன்று விசாரணை
மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர் முறைகேடு; சிறப்புக்குழுவினர் இன்று விசாரணை
மாற்றுத்திறனாளி ஸ்கூட்டர் முறைகேடு; சிறப்புக்குழுவினர் இன்று விசாரணை
ADDED : ஜூன் 05, 2025 01:38 AM
திருப்பூர்; 'தினமலர்' செய்தி எதிெராலியாக, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கியதில் முறைகேடு தொடர்பான புகார் குறித்து விசாரிக்க, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துணை இயக்குனர் தலைமையிலான சிறப்புக்குழு இன்று திருப்பூர் வருகிறது.
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம், இணைப்பு சக்கரம் பொருத்திய இலவச ஸ்கூட்டர் வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளன. தகுதியற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கிவிட்டு, தகவல் கசிந்ததும், பறிமுதல் செய்து, நடவடிக்கை எடுப்பதுபோல் காட்டிக்கொள்கின்றனர்.
அதேபோல், குறிப்பிட்ட ஒரு பயனாளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஸ்கூட்டரை, சம்பந்தமில்லாத வேறு நபருக்கு வழங்கிய முறைகேடுகளும் நடந்துள்ளன.
அரசு துறை சார்ந்த அலுவலகங்களில் பணிபுரிவோர், 60 சதவீதத்துக்கும் கீழ் உடல் பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் பெற தகுதியில்லை. ஆனால், இவர்களுக்கும் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு, பின் எதிர்ப்பால், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நம் நாளிதழில் இதுதொடர்பான செய்திகள் வெளியானதன் மூலம், முறைகேடுகள் அம்பலமாகின. நம் நாளிதழ் செய்தி அடிப்படையில், சமூக ஆர்வலர்கள் சரவணன், கிருஷ்ண சாமி உள்ளிட்டோர், சென்னையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் மதுமதியை சந்தித்து, புகார் மனு அளித்துள்ளனர்.
'தினமலர்' செய்தி எதிரொலியாக, திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதா என விசாரணை நடத்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர் லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையிலிருந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துணை இயக்குனர் ரவீந்திர நாத் சிங் தலைமையிலான சிறப்பு விசாரணை குழு, இன்று திருப்பூர் வருகிறது.
கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், காலை, 11:00 மணி முதல், சிறப்பு குழுவினர் தணிக்கை மேற்கொள்ள உள்ளனர்.
தகுதியான நபர்களுக்குதான் இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளதா; ஏதேனும் முறைகேடுகள், விதிமீறல்கள் நடந்துள்ளனவா என, சிறப்பு குழுவினர் விரிவான விசாரணை நடத்த உள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்ப்பு
சிறப்பு குழுவினர், நேர்மையான முறையில் விசாரணை நடத்தி, தகுதியற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்கூட்டர்களை பறிமுதல் செய்யவேண்டும். விண்ணப்பித்து, மாதக்கணக்கில் காத்திருக்கும் தகுதியானவர்களுக்கு, விரைந்து ஸ்கூட்டர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடுகளுக்கு துணைபோகும் அலுவலர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளின் எதிர்பார்ப்பு.