ADDED : அக் 13, 2024 11:45 PM
அனைத்து தொழிலாளர்களும், தங்களுக்கு கிடைக்கும் போனஸ் தொகையை திட்டமிட்டு, பயனுள்ள வகையில் செலவிடவேண்டியது அவசியம்.
எலக்ட்ரானிக்ஸ், மொபைல், பர்னிச்சர் உள்பட அனைத்து நிறுவனங்களும் எக்கச்சக்கமான ஆபர்களை அறிவித்துள்ளன; தவணை முறையில் பொருட்கள் வாங்கும் வசதிகளும் உள்ளன. போனஸ் தொகை இருக்கிறது; கிரெடிட் கார்டு இருக்கிறது என்பதற்காக, தேவையற்ற எந்த பொருட்களையும் வாங்கக்கூடாது.
தீபாவளி என்றாலே, பட்டாசு, புத்தாடை, இனிப்புதான். அதற்காக, முழு போனஸையும், கொண்டாட்டத்துக்கே செலவிடக்கூடாது.
குழந்தைகளின் கல்வி கட்டணம், வீட்டுக்கு மிகவும் தேவையான பொருட்கள் வாங்க செலவிடலாம்; குறிப்பிட்ட சதவீத தொகையை, குடும்ப பொருளாதார நலனுக்காக, வங்கி, அஞ்சலக திட்டங்களில் சேமிக்க வேண்டும். வாங்கிய கடன்களை, முழுமையாகவோ, ஒரு பகுதியையோ திருப்பிச் செலுத்தி முடித்தால், அதுவும் கூட குடும்ப பொருளாதாரத்துக்கு ஆரோக்கியமானதுதான்.
மோசடி வலையில் சிக்காதீர்
பண்டிகை காலங்களில் பண புழக்கம் அதிகரிப்பது வழக்கம். மோசடி ஆசாமிகள், புதுப்புதுவகைகளில் வலை விரிக்க வாய்ப்பு உள்ளது. விலை உயர்ந்த மொபைல்போனை மலிவான விலைக்கு விற்பனை செய்வதாக, போலி இணையதள லிங்க்கள் வரலாம்.
வங்கியாளர்கள் போல் பேசி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு விவரங்கள், ஓ.டி.பி., கேட்பது என, எந்தவிதத்தில் வேண்டுமானாலும், மோசடி வலை விரிக்கப்படலாம். தேவையற்ற லிங்க்கள் வந்தால் உடனடியாக அழித்துவிடவேண்டும். ஆன்லைனில் பொருட்கள் வாங்குவோர், குறிப்பிட்ட நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தேவையற்ற இடங்களில், கிரெடிட், டெபிட் கார்டு, வங்கி விவரங்களை பதிவு செய்யக்கூடாது. அங்கீகரிக்கப்படாத செயலிகளை ஒருபோதும் நிறுவக்கூடாது. அவை, பின்புலத்தில் ரகசியமாக செயல்பட்டு, தனிநபர் விவரங்களை திருடி, ஹேக்கர்களுக்கு அனுப்பிவைத்துவிடும். பயன்பாடு இல்லாதபோது, கிரெடிட் கார்டு,டெபிட் கார்டுகளை வங்கி செயலிகள் மூலம், ஆப் செய்து வைப்பது பாதுகாப்பானது.