/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விடுமுறை நாட்களை குட்டீஸூடன் கழியுங்கள்
/
விடுமுறை நாட்களை குட்டீஸூடன் கழியுங்கள்
ADDED : ஏப் 05, 2025 05:55 AM

வெயில் காரணமாக, பள்ளி இறுதியாண்டு தேர்வுகள் முன்கூட்டியே முடிக்கப்படுகிறது. இதனால், குழந்தைகளுக்கான கோடை விடுமுறை நாட்கள் கூடுதலாக உள்ளது.
இது குழந்தைகளுக்கு குதுாகலமான செய்தி என்றாலும், பெற்றோரில் பலர், 'இரண்டு மாசமா... நம்ம வீட்டு குட்டீஸ் நம்மள ஒருவழி ஆக்கிடுவாங்களே' என்று அச்சமும் கொள்கின்றனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது:
குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுடைய முதல் பள்ளிக் கூடம், வீடுதான். பெற்றோர்தான் அவர்களது முதன்மையான குரு. பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை பகிர்ந்து கொண்டால், பொழுதுபோய்விடும்; அவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
குழந்தைகளுடன் நேரத்தை செலவிடவும், அவர்களுக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுக்கவும் இக்கால கட்டம் மிகவும் சிறந்தது. ஏனெனில், விடுமுறை என்பதால் வீட்டில்தான் அவர்கள் அதிக நேரமிருப்பர்; நம்முடன்தான் உடனிருப்பர். நிறைய பொழுதுபோக்கு விஷயங்களை சொல்லித்தருவதற்கான வாய்ப்பு உருவாகும்.
செடி, மரக்கன்றுகளை வைக்கவும், வளர்க்கவும் கற்றுத்தரலாம். பூக்களை பற்றி விளக்கம் தரலாம். வாசிப்பு திறனை மேம்படுத்திக் கொள்ள அதிக நேரம் கிடைக்கும். பாடப்புத்தகம் அல்லாத பிற கதை, நகைச்சுவை, சுவாரசிய தகவல் புத்தகங்களை வாசிக்க பழக்கலாம்.
ஆர்வமிருந்தால், செல்லபிராணி வளர்ப்பை ஊக்குவிக்கலாம். இதன் மூலம் நாய், பூனைகளிடம் குழந்தைகளுக்கு உள்ள பயம் நீங்கும்.வீட்டில் சின்ன சின்ன வேலைகள், சமையல் செய்வதற்கு உதவி, வீடுகளை சுத்தம் செய்ய கற்றுத்தரலாம்.
நேரம் கிடைக்கும் போது பாட்டு பாடவும், நடனமாடவும் சொல்லித்தாருங்கள். உற்சாகத்தை அதிகமாக்குவதுடன் உடற்பயிற்சியாகவும் அமையும்.
விளையாட்டில் ஆர்வம் இருந்தால், எந்த விளையாட்டோ அதற்கான பயிற்சி முகாமில் சேர்த்து, பெற்றோர்களும் அங்கு சென்று நேரத்தை அவர்களுக்காக செலவிடலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தின்பண்டங்கள் கூடாது
குழந்தைகள் நல மருத்துவர் செந்தில்குமார் கூறியதாவது:
விடுமுறை தினம் என்றாலே நம்மில் பலர் உணவில் கவனம் செலுத்துவதில்லை. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், குழந்தைகளுக்கு 'ஜங்'புட் அயிட்டங்களை அதிகளவில் கொடுக்க வேண்டாம். தின்பண்டங்களை நாம் அவர்கள் கண்ணில்படும்படி வைத்திருந்தால், வீட்டில் அதிக நேரம் இருப்பதால், நிச்சயம் அவற்றை எடுத்து முழுமையாகச் சாப்பிட விரும்புவர்.
விடுமுறைக்கு பின் அவர்கள் எடை அதிகமாகியிருப்பது காண முடியும். எனவே, தேவையற்ற தின்பண்டங்களை வாங்காமல், பழங்கள், சத்து நிறைந்த காய்கறிகளை அவர்களுக்கு உண்ண கொடுக்க வேண்டும். ஒன்று முதல் இரண்டு மணி நேரத்துக்குள் தான் 'டிவி', மொபைல்போன், லேப்டாப் பயன்பாடு இருக்க வேண்டும். நீண்ட நேரம் அவற்றிலே முழ்கியிருப்பதை தடுக்க வெளியே அழைத்துச் செல்ல வேண்டும். வெயிலில் குறைந்த நேரமாவது விளையாட அனுமதிக்க வேண்டும். அப்போது தான் உற்சாகமாக அவர்கள் இருப்பர்.