ADDED : செப் 20, 2024 10:47 PM

மனிதா உன் எண்ணத்தில் எந்நாளும் நன்னாளாம்
மறு நாளை எண்ணாதே, இந்நாளே பொன்னாளாம்
பல்லாக்கை துாக்காதே, பல்லாக்கில் நீ ஏறு...
- கவியரசு கண்ணதாசனின் வரிகள், திரைப்பாடலாக இன்றளவும் ஒலித்து கொண்டு தான் இருக்கிறது. இந்த வார்த்தைகள் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, தொழில் முனைவோருக்கு மிக நெருக்கமாக அமைந்துள்ளது. இதன் வலிமையை உணர்ந்தால், கண்டிப்பாக தொழில் ஜெயிக்கலாம்... வாழ்க்கையில் ஜொலிக்கலாம்.
அப்படியொரு தன்னம்பிக்கை பொங்கும் வார்த்தைகள் அணிவகுத்த கருத்தரங்கு நேற்று திருப்பூர் அருகே நடந்தது. இளம் தொழில் முனைவோர் மற்றும் புதிதாக தொழில் துறையில் கால்பதிக்க விரும்புவோருக்கான வழிகாட்டி நிகழ்ச்சியாக, திருமுருகன்பூண்டி பாப்பீஸ் விஸ்டா ஓட்டல் அரங்கில் அரங்கேறியது.
இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) மற்றும் யங் இந்தியா அமைப்பின் சார்பில் 'சைனோகிராப், 2.0' என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு, யங் இந்தியா திருப்பூர் தலைவர் நிரஞ்சன் வரவேற்றார். சி.ஐ.ஐ., திருப்பூர் தலைவர் இளங்கோ, சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து இணை ஒருங்கிணைப்பாளர் விமல்ராஜ் பேசினார்.
திருப்பூரின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் கவுரவிக்கப்பட்டனர். அவ்வகையில், விருது பெற்றவர்கள் தங்கள் வெற்றிக்கதைகள், திருப்பூரின் முன்னேற்றம், லட்சியம் குறித்து பேசினர்.
--------------------------------
சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆடை
திருப்பூரில் உள்ள தொழிற்சாலைகளில், தினமும், 13 கோடி லிட்டர் நீர் சுத்திகரிக்கப்பட்டு மறு சுழற்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளில் மழைநீர் சேகரிப்பை ஊக்குவிக்க, இந்திய தொழிற்கூட்டமைப்பு உதவ வேண்டும.
தொழிற்சாலை வளாகத்திற்குள் மழைநீர் சேகரிப்பு வகையில் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். உலகளவில், சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆடை உற்பத்தி மற்றும் வர்த்தகத்தின் மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது; குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் இந்த விவகாரத்தில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. அத்தகைய ஆடை உற்பத்தியை மேற்கொள்ள உடல் மற்றும் மனதளவில் உற்பத்தியாளர்கள் தயாராக வேண்டும்.
- சக்திவேல்
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்
சங்க நிறுவன தலைவர்
--------------------------------
'மெட்ரோ ரயில்' அவசியம்
கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் சிறிய நகராட்சியாக இருந்து, சில நுாறு கோடிக்கு தான் வர்த்தகம் நடந்தது. 1970ம் ஆண்டுக்கு பின் ஏற்றுமதியில் கால்பதித்து சிறுக, சிறுக வர்த்தகம் செய்து, இன்று, பெரும் வளர்ச்சி பெற்றிருக்கிறது.
கடந்த, 1990 ஆண்டுக்கு பின், உள்நாட்டு, ஏற்றுமதி வர்த்தகத்தில் அபார வளர்ச்சியை திருப்பூர் பெற்றது. திருப்பூரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த, 3வது குடிநீர் திட்டத்தை, ஏற்றுமதியாளர்கள் சங்கம் தான் கொண்டு வந்தது. சீர்கேடு அடைந்துள்ள நொய்யல் நதியை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம். கோவை விமான நிலையம், திருப்பூரை இணைக்கும் மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார். திருப்பூர் வளர்ச்சிக்கு மெட்ரோ ரயில் திட்டம் மிகமிக அவசியம்.
- அகில் ரத்தினசாமி
'நிட்மா' தலைவர்
--------------------------------
தொழிலாளர் பற்றாக்குறை தீரணும்
திருப்பூர் தொழிற்துறையில் இன்னும் நவீனங்கள் புகுத்தப்பட வேண்டும். தொழிலாளர் பற்றாக்குறை, மிகப்பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. வட மாநிலம் உள்ளிட்ட வெளியில் இருந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு குடியிருப்பு, அவர்களது பிள்ளைகளுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க, சி.ஐ.ஐ., முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
திருப்பூருக்கென தனியாக நீராதாரம் இல்லை. எனவே, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பில் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம். மிக அதிகளவில் உள்ள பாலிதின் புழக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்துவதற்குரிய விழிப்புணர்வையும் சி.ஐ.ஐ., மேற்கொள்வது அவசியம். இளைஞர்கள் தவறான வழிக்கு செல்கின்றனர்; அவர்களது வாழ்க்கையை கட்டமைக்க திணறுகின்றனர். எனவே, பெற்றோருக்கு அவ்வப்போது பயிலரங்கு, கருத்தரங்கு நடத்தி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
- மெஜஸ்டிக் கந்தசாமி
சி.ஐ.ஐ., முன்னாள் தலைவர்
--------------------------------
பசுமை சூழல் இப்போதைய தேவை
கடந்த, மே மாதம் கோடையின் போது தொழிற்சாலைகளை காலை, 6:00 மணி முதல், 11:00 மணி வரையும், மாலை, 5:00 மணி முதல், 11:00 மணிக்கு தான் இயக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தியது. தொழிலாளர்களை வெயிலில் இருந்து காப்பதற்காகவே இந்த அறிவிப்பு வெளியானது. காலநிலை மாற்றம் என்பதும் மிகப்பெரும் இயற்கை பேரிடர். 60 முதல், 70 ஆயிரம் கோடி ரூபாய் ஆடை வர்த்தகம் நடக்கும் மாவட்டமாக திருப்பூர் உள்ளது.
தொழிற்சாலைகளில் இருந்து ஒரு சொட்டு மழைநீர் கூட வெளியேறாத வகையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்; சுற்றுச்சூழலுக்கு உகந்த சூழல் கட்டடங்கள் உருவாக்கப்பட வேண்டும். வீதி, தெருக்கள் உள்ளிட்ட சுற்றுப்புறம் சுகாதாரமாக இருக்க வேண்டும். அதனை உறுதிப்படுத்தும் பணியில், 'யங் இந்தியா' அமைப்பினர் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். 'வனத்துக்குள் திருப்பூர்' அமைப்பின் சார்பில், கடந்த, 10 ஆண்டில், 19 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.
- சிவராம்
ராயல் கிளாசிக் நிர்வாக இயக்குனர்
மற்றும் 'வெற்றி' அமைப்பு தலைவர்
------------------------
இளம் தொழில் முனைவோர் மற்றும் புதிதாக தொழில் துறையில் கால்பதிக்க விரும்புவோருக்கான வழிகாட்டி நிகழ்ச்சியை, வெல்நோன்ஸ் சிண்டிகேட், எம்.ஆர்.எம்., ஜெனரேட்டர், கன்சாய் ஸ்பெஷல், பூமெக்ஸ், தி குளோபல் டெக்ஸ்டைல் கெமிக்கல், ராஜலட்சுமி ரூபிங், டெலி பிரஷ், கிராஸ்ப் கிளாதிங், சிபி டிராவல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து நடத்தின.