/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூருக்கு வந்த வசந்த காலம்! பிரிட்டன் ஒப்பந்தம்: ஏற்றுமதியாளர்கள் 'குஷி'
/
திருப்பூருக்கு வந்த வசந்த காலம்! பிரிட்டன் ஒப்பந்தம்: ஏற்றுமதியாளர்கள் 'குஷி'
திருப்பூருக்கு வந்த வசந்த காலம்! பிரிட்டன் ஒப்பந்தம்: ஏற்றுமதியாளர்கள் 'குஷி'
திருப்பூருக்கு வந்த வசந்த காலம்! பிரிட்டன் ஒப்பந்தம்: ஏற்றுமதியாளர்கள் 'குஷி'
ADDED : மே 08, 2025 01:16 AM

திருப்பூர்; பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது, திருப்பூருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையும்; உண்மையான வசந்த காலம் துவங்கியுள்ளதாக, ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திருப்பூரின் வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி மீதான ஈர்ப்பால், பிரிட்டன் ஆர்டர்கள் திருப்பூருக்கு கிடைத்து வருகின்றன. தற்போதைய சூழலில், உலக நாடுகளின் பசுமை சார் உற்பத்தி எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் கேந்திரமாக, திருப்பூர் உயர்ந்துள்ளது. இந்நிலையில், பிரிட்டனுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது, மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னரே, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளுடன் வர்த்தக தொடர்பு அதிகரித்தது. ஆனால், இந்தியா- பிரிட்டன் வர்த்தகம் நீண்ட அனுபவம் வாய்ந்தது.
அந்நாட்டு வர்த்தக நிறுவனங்கள், திருப்பூருடன் நீண்ட தொடர்பில் இருந்து வருகின்றன. வர்த்தகத்தில், ஆயத்த ஆடை மற்றும் பின்னலாடைகளை, பிரிட்டனில் இறக்குமதி செய்ய, 12 சதவீதம் வரிவிதிக்கப் படுகிறது.
இதனால், வங்கதேசம், சீனாவுடன், நமது ஏற்றுமதியாளர் போட்டியிட இயலாத நிலை இருந்தது. இந்நிலையில், முழுமையான வரியில் இருந்து விலக்கு கிடைக்கும் போது, இந்திய ஆடைகளுக்கு அந்நாட்டு வர்த்தகர் மற்றும் மக்களிடையே வரவேற்பு அதிகரிக்கும்.
அமெரிக்காவுடனும் வர்த்தக ஒப்பந்தம் உருவாக இருக்கிறது. அதனை தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக ஒப்பந்தம் உருவாக்க, தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் முயற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில், எட்டு ஆண்டு முயற்சியால், பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்தம் உருவாகியுள்ளது. இது, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு வசந்தகாலமாக மாறியுள்ளது.
வளர்ச்சி அதிகரிக்கும்
அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பு (அபாட்) தலைவர் இளங்கோவன் கூறுகையில், ''பிரிட்டன் உடனான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு மிகுந்தது; நீண்ட நாள் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இரு நாட்டு பாராளுமன்றங்களில் தீர்மானம் நிறைவற்றி, அமலுக்கு வர ஓரிரு மாதமாகும். இருப்பினும், இந்திய ஆயத்தஆடை ஏற்றுமதியில், பிரிட்டனின் ஒன்பது சதவீத பங்களிப்பு என்பது, வேகமாக வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது,'' என்றார்.
திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், ''அமெரிக்க அரசு, சீனா, வங்கதேசம், வியட்நாம் போன்ற போட்டிகளுக்கு அதிக வரி விதித்துள்ளது. இதனால், போட்டி நாடுகளுக்கான வர்த்தகர்கள், திருப்பூரை நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில், பிரிட்டனுடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது, மிகப்பெரிய வளர்ச்சிக்கு வழிகாட்டும். முன்னதாக, மத்திய, மாநில அரசுகள், தொழில்துறையினரை அழைத்துப்பேசி, தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.'' என்றார்.