/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'உங்களுடன் ஸ்டாலின்': மாவட்டத்தில், 325 முகாம்
/
'உங்களுடன் ஸ்டாலின்': மாவட்டத்தில், 325 முகாம்
ADDED : ஜூலை 13, 2025 12:38 AM
திருப்பூர் : ''உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களை, சரிவர பயன்படுத்தி, அரசு வழங்கும் சேவைகளை பெற்று, பொதுமக்கள் பயன்பெறலாம்,'' என, கலெக்டர் மனிஷ் நாரண வரே தெரிவித்துள்ளார்.
இது குறித்து, கலெக்டர் கூறியதாவது:
தமிழக அரசின், 'உங்களுடன் ஸ்டாலின் முகாம், நான்கு கட்டமாக, தலா ஒரு மாதம் வீதம், நவ., மாதம் வரை நடக்கும். முதல்கட்ட முகாம்,வரும் 15 ம் தேதி துவங்கி, ஆக., 14 ம் தேதி வரை நடக்கும்; 2வது முகாம், ஆக., 15ல் துவங்கி, செப்., 14 வரையும், 3வது முகாம், செப்., 15ல் துவங்கி அக்.,14 வரையிலும், 4வது முகாம், அக்., 15ல் துவங்கி நவ., 14 வரையிலும் நடக்க உள்ளது.
மாவட்டத்தில், மொத்தம், 325 முகாம்கள் நடக்க உள்ளன. வரும், 15 முதல், ஆக., 14 வரை, 120 முகாம்கள் நடக்கும்; இரண்டு மற்றும் மூன்றாவது கட்டமாக, தலா, 96 முகாம்களும், 4வது கட்டமாக, 13 முகாம்களும் நடக்கும்.
முதல்கட்ட முகாம்
மாநகராட்சியின் ஏழு இடங்கள்; நகராட்சிகளில், 20; பேரூராட்சிகளில், ஏழு இடங்களில் ஊரகப்பகுதியில், 86 இடங்கள் உட்பட 120 இடங்களில் முதல்கட்ட முகாம் நடக்கும்.
முகாம் நடக்கும் இரண்டு நாட்கள் முன்னதாக, வீடு வீடாக, முகாம் விவரங்கள் அடங்கிய தகவல் படிவமும், விண்ணப்ப படிவமும் வழங்கப்படும். நகர்ப்பகுதியில், 13 அரசுத்துறைகளின், 43 சேவைகளும், கிராமப்புறத்தில், 15 துறைகளின், 46 சேவைகளும் முகாமில் கிடைக்கும்.
காலை, 9:00 முதல், மாலை, 3:00 மணி வரை முகாம் நடக்கும்; முகாமில் பெறப்படும்விண்ணப்பங்கள் மீது, 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். தினமும், ஆறு முகாம்கள் வீதம், வாரத்தில் நான்கு நாட்கள் முகாம் நடத்தப்படும்.
மகளிர் உரிமைத்தொகை
முகாமில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க, நான்கு கவுன்ட்டர்கள்திறக்கப்பட்டு, விண்ணப்பம் பெறப்படும்; பொதுமக்கள், ஆதார்கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களை எடுத்து வந்தால், தன்னார்வலர்கள் பூர்த்தி செய்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாம் வாயிலாக, அரசுத்துறைகளின் சேவைகளை ஒரே இடத்தில் பெறலாம். திருப்பூர் மாவட்ட மக்கள், உங்களுடன் ஸ்டாலின் முகாம் வாயிலாக அரசு சேவைகளை பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு, கலெக்டர் கூறினார்.

