/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநில அடைவுத்திறன் ஆய்வு கருத்துக்கேட்பு கூட்டம்
/
மாநில அடைவுத்திறன் ஆய்வு கருத்துக்கேட்பு கூட்டம்
ADDED : ஜூலை 01, 2025 10:14 PM
- நமது நிருபர் -
திருப்பூரில் நடந்த மாநில அடைவுத்திறன் குறித்த ஆய்வு மற்றும் தலைமை ஆசிரியர் கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற, அமைச்சர் மகேஷ் பேசியதாவது:
மாநிலம் முழுதும், 9.80 லட்சத்துக்கு அதிகமான மாணவ, மாணவியரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை புரிந்து படித்தல், பொருள் புரிந்து வாசித்தல் சில இடங்களில் குறைந்துள்ளது.
இதை மீட்டெடுக்க, துவக்கப் பள்ளி நிலையிலேயே சிறப்பாக கல்வியை தர அரசு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைமை ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்படுகிறது; கருத்து பரிமாற்றம் மட்டுமே; ஆசிரியர்கள் மேல் குற்றச்சாட்டுகளை முன் வைக்கவில்லை. தனித்திறனை வளர்த்துக் கொள்ள, புரிதலுடன் பாடத்தை கற்க அறிவுறுத்துகிறோம்.
இரண்டாம் பெற்றோராக ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், பெற்றோருக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளது. குழந்தைகளுக்குச் செல்லம் கொடுக்கலாம்; அதேசமயம், 'ஸ்மார்ட்போன்' தவிர்த்திடுங்கள். படிப்பு கவனம் சிதறி விடக்கூடாது.
ஆசிரியர்களின் திறமைக்கு மதிப்பு அளிக்க அரசு நினைக்கிறது. அதற்கேற்ப பணிகள் இருக்க வேண்டும். ஆசிரியர்களை முழுமையாக நம்பித்தான் பெற்றோர் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பி வைக்கின்றனர்.
அனுபவ யுக்திகளை கையாண்டு சிறந்த மாணவ, மாணவியரை ஆசிரியர்களால் உருவாக்க முடியும். அறம் சார்ந்த சமூகத்தை உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பு ஆசிரியரான உங்களுக்கு கல்வித்துறையால் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.