/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கருத்தடை அறுவை சிகிச்சை; மாதம் 1,300 நாய்களுக்கு இலக்கு
/
கருத்தடை அறுவை சிகிச்சை; மாதம் 1,300 நாய்களுக்கு இலக்கு
கருத்தடை அறுவை சிகிச்சை; மாதம் 1,300 நாய்களுக்கு இலக்கு
கருத்தடை அறுவை சிகிச்சை; மாதம் 1,300 நாய்களுக்கு இலக்கு
ADDED : செப் 25, 2024 12:18 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஊரக பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆடுகளை கடித்துக்குதறும் நாய்களால், காங்கயம், வெள்ளகோவில், தாராபுரம் உள்பட பல்வேறு பகுதி விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
எனவே, நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என, ஒட்டுமொத்த விவசாயிகளும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். சில நாள் முன், காங்கயம் தாலுகா அலுவலகம் முன் மற்றும் கலெக்டர் அலுவலகம் முன் ஆகிய இடங்களில், நாய் கடித்து இறந்த ஆடுகளை கொண்டு வந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில், தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.
மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் இளங்கோ மற்றும் தாசில்தார்கள், கால்நடைத்துறை அலுவலர்கள், அனைத்து உள்ளாட்சி துறை அலுவலர்கள் பங்கேற்றனர். இதில், மாதம் 1,300 நாய்களுக்கு கருத்தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி, பொங்கலுார், காங்கயம், தாராபுரம், உடுமலை, மூலனுார், வெள்ளகோவில், குண்டடம், மடத்துக்குளம், குடிமங்கலம் ஆகிய, 13 ஒன்றியங்களில் உள்ள கால்நடை மருத்துவமனைகளிலும், போர்க்கால அடிப்படையில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கால்நடைத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து இப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பொதுமக்கள் தங்கள் பகுதி தெருநாய்கள் குறித்து, 1077 என்கிற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் அழைத்து தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.