பிளாஸ்டிக் கிடங்காக மாறிய ஓடைகள்: நீரோட்டம் தடைபட்டு பாதிப்பு
பிளாஸ்டிக் கிடங்காக மாறிய ஓடைகள்: நீரோட்டம் தடைபட்டு பாதிப்பு
UPDATED : ஜூன் 11, 2026 05:32 PM
ADDED : ஜூன் 11, 2026 05:11 PM
உடுமலை: நகர மழை நீர் வடிகால்களான ஓடைகளில், நீரோட்டம் தடைபடும் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளது; பிளாஸ்டிக் தடை குறித்து நகராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்யாதது, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
உடுமலை நகரில் கழுத்தறுத்தான் பள்ளம், தங்கம்மாள் ஓடை உள்ளிட்ட ஓடைகள் முன்பு முக்கிய நீராதாரங்களாக இருந்தன.
மழை நீர் வடிகாலாகவும், நிலத்தடி நீர்மட்டத்துக்கு ஆதாரமாகவும், ராஜவாய்க்கால் பள்ளத்துக்கு நீர் வரத்து அளிப்பவையாகவும், இந்த ஓடைகள் இருந்தன. நகர வளர்ச்சிக்குப்பிறகு இந்த ஓடைகள் திறந்தவெளி பெரிய சாக்கடையாக மாற்றப்பட்டன.
ஓடைகளை மீட்கவும், சுகாதார மேம்பாட்டுக்காகவும் உடுமலை நகரில், பாதாளச்சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இருப்பினும், ஓடைகள் கழிவு நீர் கால்வாயாகவே உள்ளன.
இந்நிலையில், நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் திறந்தவெளிகளில் வீசியெறியப்படுகிறது. குறிப்பாக, இரு ஓடைகளிலும், டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது.
இதனால் கழிவு நீரும் செல்ல வழியில்லாமல், ஆங்காங்கே தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வதற்கான ஆய்வு செய்யாதது, பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த துவங்கியுள்ளது.
பருவமழை காலங்களில், இந்த ஓடைகளில் மழை நீர் செல்ல வழியில்லை. இதனால், நீரோட்டம் தடைபட்டு அருகிலுள்ள குடியிருப்புகளில் பாதிப்பு ஏற்படும்.
இப்பிரச்னைக்கு தீர்வாக ஓடைகளை துார்வார வேண்டும். நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
