/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளக்கரைகளை வலுப்படுத்தணும்! மழை நீர் சேகரிப்பு அவசியம்
/
குளக்கரைகளை வலுப்படுத்தணும்! மழை நீர் சேகரிப்பு அவசியம்
குளக்கரைகளை வலுப்படுத்தணும்! மழை நீர் சேகரிப்பு அவசியம்
குளக்கரைகளை வலுப்படுத்தணும்! மழை நீர் சேகரிப்பு அவசியம்
ADDED : நவ 03, 2025 09:39 PM
உடுமலை:  நீர்நிலை கரைகளில், சீமை கருவேல மரங்களை அகற்றி, கரைகளை வலுப்படுத்தினால், வடகிழக்கு பருவமழை சீசனில் கிடைக்கும் நீரை சேகரித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், நிலத்தடி நீர்மட்டத்துக்கு, கிராமங்களிலுள்ள, குளம், குட்டைகளே முக்கிய ஆதாரமாக உள்ளன. இதில், பருவமழை காலத்தில் மட்டும், நீர்வரத்து பெறும், குளங்களில், எண்ணிக்கை, நுாற்றுக்கும் அதிகமாக இருக்கும்.
இவ்வாறு, முக்கிய நீர்நிலைகளான குளங்கள் பராமரிப்பில், தொடர் அலட்சியம் காட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக, மழை நீர் மற்றும் பாசன நீரை முழு கொள்ளளவில், தேக்கி வைக்கும் வகையில், குளங்களின் கரைகள் வலுவாக இல்லை.
மேலும், பெரும்பாலான குளங்களின் கரையில், சீமைகருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. இதனால், குளங்களிலுள்ள நீர் அதிகளவில் உறிஞ்சப்படுவதுடன், அருகிலுள்ள, விளைநிலங்களும் பாதிக்கப்படுகின்றன.
கரைகளை வலுப்படுத்தும் பணிகளும் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை. தற்போது வடகிழக்கு பருவமழை சீசன் துவங்கியுள்ளது.
இந்த சீசனில், அதிக மழைப்பொழிவு இருந்தால் மட்டுமே, உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், வறட்சியை தவிர்க்க முடியும். எனவே, குளங்களில் மழை நீரை தேக்கி வைப்பது அவசியமாகியுள்ளது.
வட்டார வாரியாக குளங்களின் நிலை குறித்து ஆய்வு செய்து, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் இதர திட்டங்கள் வாயிலாக குளங்களின் கரையிலுள்ள சீமை கருவேலன் மரங்களை அகற்ற வேண்டும். கரைகளை வலுப்படுத்தவும் நடவடிக்கை தேவை என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

