ADDED : ஏப் 26, 2025 12:21 AM

திருப்பூர்: தொழிற்சங்கங்கள் சார்பில், அகில இந்திய அளவிலான வேலை நிறுத்தம், மே 20ம் தேதி நடக்கிறது.
போராட்ட தயாரிப்பு மாநாடு, கே.எஸ்.ஆர்., மண்டபத்தில் நேற்று நடந்தது. எச்.எம்.எஸ்., சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார்.
எம்.எல்.எப்., மாநில செயலாளர் அத்திரி தாஸ், ஏ.ஐ.டி.யு.சி., பொது செயலாளர் நடராஜன், சி.ஐ.டி.யு.. பொதுசெயலாளர் ரங்கராஜன், எல்.பி.எப்., மாவட்ட செயலாளர் சிதம்பரசாமி, ஐ.என்.டி.யு.சி., மாவட்ட தலைவர் ஈஸ்வரன், ஏ.ஐ.சி.சி.டி.யு., மாவட்ட பொறுப்பாளர் முத்துக்கிருஷ்ணன், யு.டி.யு.சி., மாவட்ட செயலாளர் சதீஷ் உள்ளிட்டோர் பேசினர்.
தொழிலாளர் சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும்; குறைந்தபட்ச ஊதியமாக, 26 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, சமூக பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, 20ம் தேதி வேலை நிறுத்தம் நடக்கிறது.
போராட்டம் குறித்து முன்னறிவிப்பு செய்து, நோட்டீஸ் கொடுப்பது, விரிவான பிரசாரம் மேற்கொள்வது, அடுத்தகட்ட ஏற்பாடு குறித்து, மே 4ம் தேதி ஆலோசனை விவாதிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
முன்னதாக, காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.