/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பலமான பாதுகாப்பு; குடியிருப்பாளர்கள் கைகோர்ப்பு
/
பலமான பாதுகாப்பு; குடியிருப்பாளர்கள் கைகோர்ப்பு
ADDED : ஆக 02, 2025 11:33 PM

திருப்பூர் மாநகராட்சி விரிவாக்கத்தின்போது, வீரபாண்டி ஊராட்சி இணைக்கப்பட்டது. அப்போது மாநகராட்சியுடன் நொச்சிபாளையம் பிரிவு, அல்லாளபுரம் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விக்னேஸ்வரா நகர் குடியிருப்பும் இணைந்தது.
கடந்த 1988 - 89ம் ஆண்டில், உள்ளூர் திட்டக் குழுமத்தில் அங்கீகாரம் பெற்று இக்குடியிருப்பு அமைக்கப்பட்டது. நான்கு பிரிவுகளாக படிப்படியாக அனுமதி பெற்று தற்போது ஒன்றிணைந்த குடியிருப்பாக உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட தனி வீடுகளும், 13 அபார்ட்மென்ட்களும் அமைந்துள்ளன. இங்கு மனைகள் வாங்கியவர்களில் முதல் கட்டமாக 15 பேர் மட்டுமே வீடு கட்டி குடியேறினர். அடுத்தடுத்து விரைவாக புதிய வீடுகள் அமைக்கப்பட்டு தற்போது எழில் கொஞ்சும் மனைப்பகுதியாக காட்சியளிக்கிறது. கடந்த 2002ல் குடியிருப்போர் நலச்சங்கம் அமைக்கப்பட்டது.
குடியிருப்பாளர்கள்
கூட்டு ரோந்து
குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஆறுமுகம், செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் சுப்ரமணியம் ஆகியோர் கூறியதாவது:ஆரம்ப காலத்தில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வீடுகள் இருந்தன. பல்லடம் பிரதான ரோட்டிலிருந்து ஊரகப் பகுதி நோக்கிச் செல்லும் ரோட்டில் மையமாக எங்கள் குடியிருப்பு இருந்தது. திருட்டுகள் அதிகம் நடந்தன. இதற்காக குடியிருப்போர் வீடுகளிலிருந்து தலா ஒருவர் என ஒன்று சேர்ந்து இரவு ரோந்து மேற்கொண்டோம். இரவு தோறும் இரு ஷிப்ட் அடிப்படையில் எங்கள் பாதுகாப்பு - கண்காணிப்பு பணி நீண்ட நாட்கள் தொடர்ந்தது. இரவு ரோந்து பணிக்கு ஒன்று சேர்ந்த நாங்கள் தான், நலச்சங்கத்தை உருவாக்கினோம். தற்போது பிரதான இடங்களில் நான்கு இடங்களில் செக்யூரிட்டி அறை அமைத்து இரவு நேர செக்யூரிட்டிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் போலீஸ் 'பீட்'டும் போட்டுள்ளனர். தற்போது எங்கள் பகுதியில் பாதுகாப்பு என்பதில் குறையில்லாத நிலை உள்ளது. சங்கம் அமைக்கப்பட்டது முதலே எங்கள் பகுதியில் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதில் அக்கறையுடன் செயல்பட்டோம். தற்போது அனைத்து வீதிகளிலும் 20 ஆண்டு காலத்துக்கும் மேற்பட்ட மரங்கள் பல வகையிலும் பயன் தருகின்றன.
'நமக்கு நாமே' திட்டத்தில்
உருவான சாலை வசதி
நமக்கு நாேம திட்டத்தில் அனைத்து வீதிகளுக்கும் புதிய தார் ரோடு அமைத்தோம். இதை சங்கம் முன்னின்று மேற்கொண்டது. எங்கள் பகுதியில் கோவில் எதுவும் இல்லாத நிலை இருந்தது. இதற்காக சங்கம் மூலம் குடியிருப்பு பகுதியில் நான்கு சென்ட் பரப்பளவு இடம் ஒன்றை விலைக்கு வாங்கி தற்போது புதிய கோவில் கட்டும் பணியை துவங்கியுள்ளோம். இதற்காக தனி நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
பிரசன்னம் மூலம்
கிடைத்த உத்தரவு
இக்கோவில் பணி துவங்கும் போது, பிரசன்னம் வாயிலாக எங்கள் பகுதியில் உள்ள ஒரு சிறிய அளவிலான கருப்பராயன் மேடை கோவில் பராமரிப்பில்லாமல் இருப்பது தெரிந்தது. அதை சீரமைத்து விட்டு புதிய கோவில் பணியைத் துவங்க உத்தரவானது. அதன்படி அதை சீரமைத்து தற்போது வழிபாடு நடக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளோம்.
கழிவுநீர் வடிகால்
உருவாக்கப்படுமா?
இங்குள்ள முதல் நான்கு வீதிகள் அல்லாளபுரம் பிரதான ரோட்டில் அமைந்துள்ளன. இந்த ரோட்டில் மற்றும் மழை மற்றும் கழிவு நீர் வடிகால் அமைக்கப்படாமல் உள்ளது. இவற்றில் உள்ள வீடுகளில் கழிவு நீரை உறிஞ்சுகுழியில் தான் இறக்க முடிகிறது. இவற்றுக்கு வடிகால் அமைப்பு ஏற்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் பல்லடம் ரோடு சென்று சேரும் வடிகாலில், அதிகளவில் கழிவுகள் சேர்வதும், மழை நீருடன் கழிவு நீர் கலந்து எதிர்திசையில் திரும்புவதும் சகஜமாக உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக இதை சரி செய்ய வேண்டும்.
வாரம் ஒருமுறையே
குடிநீர் வினியோகம்
குடிநீர் சப்ளையைப் பொறுத்தவரை தற்போது வாரம் ஒருமுறை என்ற அளவில் கிடைக்கிறது. இது வாரம் இரு முறை என்ற அளவில் மாற்ற வேண்டும். இங்குள்ள போர்வெல் மோட்டார் மூலம் வேறு பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக அமைத்த கேட் வால்வுகள் பல இடங்களில் ரோட்டில் இடையூறாக இருந்தது. இதை சங்கத்தின் சார்பில் அனைத்து இடங்களிலும் சரி செய்தோம். குடிநீர் குழாய் பதிப்பு எனக் கூறி 7வது வீதியில் சில மாதம் முன்னர் குழி தோண்டப்பட்டது. எந்த பணியும் நடக்கவில்லை. பின்னர் சிலநாட்கள் கழித்து அந்த குழியை மூடி விட்டனர். ஆனால் சேதப்படுத்திய ரோடு சீரமைக்காமல் கிடக்கிறது.
ரிசர்வ் சைட்கள்
மீட்கப்படுமா?
எங்கள் நான்கு பிரிவுகளாக உள்ள குடியிருப்புக்கு நான்கு இடங்களில் ரிசர்வ் சைட் மொத்தம் 73.42 சென்ட் பரப்பளவில் உள்ளது. இதில் ஒரு இடம் மட்டும் காலியாக உள்ளது. மற்ற ரிசர்வ் சைட்களில் தற்போது கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் எங்கள் ரிசர்வ் சைட்களை மீட்டுத் தர வேண்டும். அந்த இடங்களில் பார்க் ஏற்படுத்தி அதை நிரந்தரமாக பராமரிக்கவும் சங்கம் தயாராக உள்ளது. நடைப்பயிற்சி, விளையாட்டு, பொழுது போக்கு என அனைத்து தரப்பினரும் முறையாகப் பயன்படுத்துவர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
---