ADDED : மே 09, 2026 03:15 AM
பொங்கலுார்: பிளஸ் 2 தேர்ச்சியில், மதிப்பெண் குறைந்ததால், திருப்பூர் அருகே மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் ஒன்றியம், பெருந்தொழுவு அருகே சாணார்பாளையத்தைச் சேர்ந்த வேளாங்கண்ணி மகள் ஜென்ஷியா, 17. இவர் பெருந்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்தார்.
நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் அவர், 600க்கு, 397 மதிப்பெண் பெற்றுள்ளார். மதிப்பெண் குறைந்து விட்டது என கூறி எல்லோரிடமும் புலம்பி வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத போது நேற்று காலை விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே சிறுமி இறந்து விட்டார். இது குறித்து, அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
