/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: மாணவர்கள் - அரசு ஊழியர்கள் உற்சாகம்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: மாணவர்கள் - அரசு ஊழியர்கள் உற்சாகம்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: மாணவர்கள் - அரசு ஊழியர்கள் உற்சாகம்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: மாணவர்கள் - அரசு ஊழியர்கள் உற்சாகம்
ADDED : செப் 09, 2025 11:14 PM

திருப்பூர்; முதல்வர் கோப்பை விளையாட்டுக்கான, திருப்பூர் மாவட்ட அளவிலான போட்டி, நேற்றுடன் நிறைவடைந்தது; வெற்றி பெற்றோர், மாநில அளவிலான போட்டிகளில் பங்கெடுக்க உள்ளனர்.
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி, ஆண்டுதோறும் நடந்து வருகிறது. மாவட்ட அளவில் வெற்றி பெறுவோருக்கு, முதல் மூன்றிடங்களுக்கான பரிசுத் தொகையாக, 3,000, 2,000 மற்றும் 1,000 ரூபாய்; மாநில அளவில் தனி நபர் போட்டி யில் முதல் மூன்றிடம் பெறுவோருக்கு, 1 லட்சம், 50 ஆயிரம் மற்றும், 25ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. குழு போட்டிகளில், மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு, 75 ஆயிரம், இரண்டாம் பரிசு, 50 ஆயிரம், மூன்றாம் பரிசு, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, 100 மீ., 200 மீ., 400, 1,500, 5,000 மற்றும், 110 மீ., தடை தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தத்தி தாண்டுதல், குண்டெறிதல், வட்டெறிதல் போட்டிகளும், அரசு ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு, 100 மீ., 1,500 மீ., நீளம் தாண்டுதல், குண்டெறிதல் போட்டிகளும் நடத்தப்பட்டன; 573 பேர் பங்கேற்றனர்.
போட்டிகளை, கோவை மண்டல முதுநிலை மேலாளர் அருணா, கோவை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் துவக்கி வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக, திருப்பூர் தடகள சங்க செயலாளர் முத்துக்குமார், டீ பப்ளிக் பள்ளி இயக்குனர் டோரத்தி, தி ஏர்ெனஸ்ட் அகாடமி பள்ளி முதல்வர் லலிதா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரகுகுமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், கண்காணிப்பு உறுப்பினர் ராஜேந்திரன் பங்கேற்றனர்.
இதில், தமிழக அரசின் டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது பெற்ற உடற்கல்வி இயக்குனர் முருகேஸ்வரிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இரு நாள் நடந்த தடகள போட்டியில் முதலிடம் பிடித்தவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர்.
அதிகரிக்கும் ஆர்வம் பரிசுத்தொகை அதிகம் என்பதாலும், முதல்வர் கோப்பை போட்டியில் மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு உயர்கல்வி வாய்ப்பில் சலுகை, விளையாட்டு இட ஒதுக்கீடு அடிப்படையில் முன்னுரிமை என பல சலுகைகள் வழங்கப்படுவதால், முதல்வர் கோப்பை போட்டியில் விளையாட, மாணவ, மாணவியர் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என, அனைத்து தரப்பினரும் தங்களின் விளையாட்டு திறமையை மேம்படுத்திக் கொள்ள, இப்போட்டியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர்.
திருப்பூர் சிக்கண்ணா கலைக்கல்லுாரி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானம், பழங்கரை டீ பப்ளிக் பள்ளி, நிப்ட்-டீ கல்லுாரி மைதானம் உள்ளிட்ட பல இடங்களில் போட்டிகள் நடத்தப்பட்டது.
பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பெற்றவர்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
திருப்பூர் மாவட்ட அளவில் மட்டும், பல்வேறு போட்டிகளில் பங்கேற்க, 34 ஆயிரத்து 668 பேர் முன்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது
ஒருங்கிணைப்பில் திணறல்!
உடற்கல்வி ஆசிரியர்களே, இப்போட்டிகளில் நடுவர் உள்ளிட்ட பணிகளை கவனித்த நிலையில், தனியார் விளையாட்டு அமைப்பைச் சேர்ந்தவர்களும் பங்களித்தனர். இருப்பினும், பல இடங்களில் போட்டி ஒருங்கிணைப்பில் திணறல் நிலை தென்பட்டது. குறிப்பாக, முதல்வர் கோப்பை விளையாட்டில் வெற்றியாளர்கள் குறித்த விவரத்தை வெளியிடுவதில், ஏற்பாடுகள் துளியுமில்லை. இப்பணிக்கென பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்தும், எந்த பலனும் இல்லை. போட்டியாளர் மற்றும் வெற்றி பெற்றவர்கள் விவரத்தை வெளியிட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆர்வம் காட்டாதது, மாணவ, மாணவியர் மட்டுமின்றி, அவர்களது பெற்றோர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.