/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வனப்பாதுகாப்பு துாதுவர்களாக மாணவர்கள்
/
வனப்பாதுகாப்பு துாதுவர்களாக மாணவர்கள்
ADDED : பிப் 20, 2026 04:26 AM

திருப்பூர்: அரசு பள்ளி மாணவ, மாணவியரை வனங்களை பாதுகாக்கும் துாதுவர்களாக மாற்றும் வகையில், அரசின் 'வனமும் வாழ்வும்' பயிற்சி வழங்கப்பட்டது.மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில், 33 சதவீதம் வனம் சூழ்ந்து இருந்தால் தான், சுற்றுச்சூழல் சமநிலை பெறும். இந்த இலக்கை எட்ட, அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் வனம், அது சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'வனமும் வாழ்வும்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு மற்றும் வனத்துறை இணைந்து, ஒவ்வொரு மாவட்ட அளவில், 25 பள்ளிகளை தேர்வு செய்து, தலா ஒரு ஆசிரியர் வீதம், 25 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. வனம் மற்றும் வன உயிரினங்கள், வன விலங்கு கணக்கெடுப்பு, வனத்தின் முக்கியத்துவம், மனித - விலங்கு மோதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக, முதற்கட்டமாக ரேஞ்சர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அவர்கள் வாயிலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ரேஞ்சர்கள் பயிற்சி வழங்கினர். பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், தங்கள் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்குகின்றனர்.
திருப்பூர் மாவட்ட வன அலுவலர் ராஜேஷ் கூறுகையில், ''அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த கல்வியை, இப்பயிற்சி வழங்கும். வனம் மற்றும் அதுசார்ந்த விஷயங்கள் குறித்து பயிற்சி பெற்ற மாணவர்கள், வனம் குறித்த முழு புரிதலுடன் வனத்தையும், வன விலங்கு உள்ளிட்ட வனம் சார்ந்த விஷயங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை, தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சமுதாயத்தில் ஏற்படுத்த வேண்டும். வனங்களை பாதுகாக்கும் துாதுவர்களாக அவர்கள் மாற வேண்டும் என்பதே, இத்திட்டத்தின் நோக்கம்'' என்றார்.
---
'வனமும் வாழ்வும்' பயிற்சி வழங்கப்பட்ட, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்.

