/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவர்களும் தொழில்முனைவோராகலாம்
/
மாணவர்களும் தொழில்முனைவோராகலாம்
ADDED : டிச 07, 2025 06:50 AM

வீ ட்டில் பயன்படுத்தி வீணாக வீசியெறியப்படும் பிளாஸ்டிக், ஒயர் உள்ளிட்ட பலவகை பொருட்களை அலங்கார பொருட்களாக மாற்றி, வீட்டை அலங்கரித்து கொள்ளும் பழக்கம், குழந்தைகள் பலரிடம் உள்ளது.
ஆர்வம் அதிகரிக்கும் போது, அதுவே அவர்களின் பொழுதுபோக்காகவும் மாறிவிடுகிறது. பலர் கடைகளில் இருந்தும் பலவகை பொருட்களை வாங்கி, தங்கள் கைவினைப் பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்துவர்.
குழந்தைகளின் இத்தகைய படைப்புகள், அவரவர் வீட்டளவில் மட்டுமே காட்சிப் பொருளாக அடைந்து விடாமல், பலரது வீடுகளையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், குழந்தைகளின் கை வண்ணத்தில் உள்ள படைப்புகளை சந்தைப்படுத்தும் முயற்சியில் இறங்கினார், திருப்பூரைச் சேர்ந்த இந்து. 'பிரிட்ஜ் பார் கனெக்ட்' என்ற பெயரில் ஒரு அமைப்பை நிறுவி, குழந்தைகளின் நலன் விரும்பிகளுடன் இணைந்து, கடந்த இரு ஆண்டாக, குழந்தைகளின் படைப்புகளை காட்சிப்படுத்தி, விற்பனை செய்யும் வகையிலான 'எக்ஸ்போ' நடத்தி முடித்துள்ளார்.
அலங்கார நகைகள், உல்லன் ஆடை, கூடை, எழுதுபொருட்கள், புத்தகம், சோப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மட்டுமின்றி, தங்கள் கை வண்ணத்தில் உருவான உணவு, எண்ணத்தில் உருவான விளையாட்டு உள்ளிட்டவற்றையும் கூட காட்சிப்படுத்தி, சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்து கூறியதாவது:
ஓவியம் உள்ளிட்ட கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் ஆர்வமும், அதனை சந்தைப்படுத்தும் எண்ணமும் கொண்ட, 8 முதல், 18 வயது வரையுள்ள குழந்தைகளை ஒருங்கிணைத்து, அவர்களுக்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். கடந்த, இரு ஆண்டாக 'எக்ஸ்போ' நடத்தியதில், 100க்கு மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்; அவர்களின் தயாரிப்புகளை பலரும் வாங்கிச் சென்று ஊக்கமளித்தனர்.
இதனால், குழந்தைகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அடுத்த மாதம், 4ம் தேதி, மூன்றாவது ஆண்டாக 'எக்ஸ்போ' நடத்தவும், குழந்தைகளுக்கான, 60 அரங்கு அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். 13 முதல், 15 வயது நிரம்பிய குழந்தைகள் தங்கள் பொருட்களை தாங்களே சந்தைப்படுத்தி, குழந்தை தொழில்முனைவோராக மாறியிருக்கின்றனர்; சக வயதுள்ள குழந்தைகளுக்கு தங்களின் படைப்புகள் குறித்த பயிற்சியையும் வழங்குகின்றனர் என்பதை தான், பெருமைக்குரிய விஷயம். குழந்தைகளின் இத்தகைய முயற்சிக்கு உறுதுணையாக பெற்றோரும் இருக்கின்றனர். லாப நோக்கில்லாமல், குழந்தைகளின் எதிர்காலம் சார்ந்த சேவை நோக்கில் தான் இதனை செய்து வருகிறோம்.

