/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறிவியல் தேர்வு எளிமை; மாணவர்கள் உற்சாகம்
/
அறிவியல் தேர்வு எளிமை; மாணவர்கள் உற்சாகம்
ADDED : ஏப் 11, 2025 11:35 PM

திருப்பூர்; பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாள் எளிமையாக இருந்ததால், தேர்வெழுதிய மாணவ, மாணவியர் மகிழ்ச்சி அடைந்தனர்.
பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு நேற்று நடந்தது. தகுதியான, 29 ஆயிரத்து, 887 மாணவ, மாணவியரில், 29 ஆயிரத்து, 451 பேர் தேர்வெழுதினர்; 436 பேர் தேர்வறைக்கு வரவில்லை. 710 தனித்தேர்வர்களில், 616 பேர் தேர்வெழுதினர்.
மாணவ, மாணவியர் பேட்டி
கிருத்திகா:
கட்டாய வினாவுக்கு சற்று யோசித்து விடை எழுத வேண்டியிருந்தது. ஒரு மதிப்பெண், இரண்டு, மூன்று மதிப்பெண்ணில் முழு மதிப்பெண் கிடைக்கும். ஆசிரியர் 'முக்கியம்' என கூறியிருந்த கேள்விகள், அனைத்தும் வந்திருந்தது. அறிவியலில் கூடுதல் மதிப்பெண் நிச்சயம் கிடைக்கும்.
விகாஷினி:
கடினமாக கேட்கப்படுமென எதிர்பார்த்த வினாக்கள் எளிமையாகத்தான் இருந்தது. வரைபடம் கேள்வி, கட்டாய வினாவில் தெரிந்த கேள்விகளே இடம் பெற்றது; யோசித்து விடை எழுதினேன். வகுப்பறையில் நடத்தப்படும் தேர்வுகளை போல் வினாத்தாள் மிக எளிமையாக இருந்தது.
தட்சணாமூர்த்தி:
பாடங்களுக்கு பின்புறமுள்ள, மாதிரித் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளே மீண்டும் கேட்கப்பட்டிருந்தது. வினாக்கள் அனைத்தும் தெரிந்தவையாக இருந்ததால், சீக்கிரமாக விடைஎழுத முடிந்தது. கட்டாய வினா எளிமையாக இருந்தது. நிச்சயம், 85க்கு மேல் மதிப்பெண்களை பெற முடியும்.
விக்னேஸ்வரன்:
ஒரு மதிப்பெண்ணில் முழு மதிப்பெண் கிடைக்கும். இரண்டு, மூன்று மதிப்பெண் அனைத்தும் முந்தைய பொதுத்தேர்வு வினாத்தாள்களில் கேட்கப்பட்ட அதே கேள்விகள் தான் அப்படியே வந்திருந்தது. கட்டாய வினா சற்று யோசிக்க வைத்தாலும், விடையளிக்கும் வகையிலான வினாவாகத்தான் இருந்தது.

