கசக்கும் கணக்கு; இனிக்கும் கம்ப்யூட்டர் மாணவர்கள் மனநிலை: ஆசிரியர்கள் கணிப்பு
கசக்கும் கணக்கு; இனிக்கும் கம்ப்யூட்டர் மாணவர்கள் மனநிலை: ஆசிரியர்கள் கணிப்பு
ADDED : மார் 26, 2026 10:39 PM
திருப்பூர்:'பிளஸ் 2 வில், கம்ப்யூட்டர் பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது,' என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்
பிளஸ் 2 பொது தேர்வு நேற்றுடன் முடிந்தது. தேர்வின் கடைசி நாளான நேற்று, கம்ப்யூட்டர் அறிவியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் கம்ப்யூட்டர் அறிவியல் (சி.எஸ்.) தேர்வெழுத, 8,786 மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்த நிலையில், 8,752 பேர் தேர்வெழுதினர். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (சி.ஏ.) தேர்வெழுத, 7,096 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், 7,017 பேர் தேர்வெழுதினர். அந்த அடிப்படையில், கம்ப்யூட்டர் பாடம் சார்ந்த தேர்வை மட்டும், 15 ஆயிரத்து 769 பேர் எழுதியிருக்கின்றனர்.
ஆசிரியர்கள் கூறியதாவது:
முந்தைய ஆண்டுகளில் கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களை படிக்க மாணவர் மத்தியில் ஆர்வம் அதிகமாக இருந்தது. அதேபோல, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த பாடப்பிரிவில் 'அட்மிஷன்' கிடைப்பதே அரிதான விஷயமாக தான் இருக்கும். 10ம் வகுப்பு பொது தேர்வில், குறைந்தபட்சம், 70 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றிருந்தால் தான், இந்த பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.
ஆனால், சமீப ஆண்டுகளாக கணக்கு மற்றும் அறிவியல் பாடங்களை படிப்பதில் மாணவர் மத்தியில் ஆர்வம் குறைந்துக் கொண்டே வருகிறது. அப்பாடங்களில் உள்ள 'பார்முலா' படிப்பதில், மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை; அது, கடினமானது என நினைக்கின்றனர். மருத்துவம், பொறியியல், ஜெ.இ.இ., உள்ளிட்ட உயர் கல்வியை தேர்வு செய்யும் மாணவ, மாணவியர் மட்டுமே, அறிவியல் மற்றும் கணக்கு தொடர்பான பாடங்களை படிக்கின்றனர். எஞ்சிய மாணவர்கள் அதற்கு பதிலாக கம்ப்யூட்டர் சார்ந்த பாடங்களை தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் தான் அப்பாடம் சார்ந்த தேர்வுகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
