ADDED : ஏப் 11, 2026 05:57 AM

திருப்பூர்: திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி நுாலகம் சார்பில், பேராசிரியர்கள், மாணவ, -மாணவியரின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில், அவர்களால் எழுதப்பட்ட, 10 புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்து பேசுகையில், ''மாணவர்களை வெறும் வாசகர்களாக மட்டும் நிறுத்தாமல், அவர்களை படைப்பாளர்களாக மாற்றியிருப்பது, கல்லுாரி நுாலக வாசகர் வட்டத்தின் மிகப்பெரிய சாதனை'' என்றார். முன்னதாக, கல்லுாரி நுாலகர் சித்ரா தவப்புதல்வி வரவேற்றார்.
கவிஞர் மஞ்சுளாதேவி, புத்தகங்களை வெளியிட்டு பேசுகையில், ''வாசிப்பு ஒரு மனிதரை முழுமையாக்கும்; அதுவே பல்வேறு சிந்தனை திறன், அறிவாற்றலை தரும். எழுத்தாளர்களாக, தங்களை அடையாளப்படுத்தி கொண்டுள்ள மாணவர்கள், தொடர்ந்து சமூக அக்கறையுடன் எழுத வேண்டும்,'' என்றார்.
'50 இதயங்களின் குரல்' என்ற வரிசையில், 6 புத்தகங்கள் வழியாக, 250-க்கும் மேற்பட்ட இளைய தலைமுறை எழுத்தாளர்கள், தங்களின் எழுத்து திறமையை வெளிப்படுத்தியிருந்தனர். ஆன்மிகம், பொருளியல், வாழ்வியல் மற்றும் மேலாண்மை ஆகிய தலைப்புகளில் நான்கு புதிய புத்தகங்கள் படைக்கப்பட்டுள்ளன.
கல்லுாரி பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியன், ஜெலின்ஸ் தினகர் ஆகியோர் பேசினர். ஈரோடு வேளாளர் மகளிர் கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் குணசுந்தரி பேசினார். நித்தீஸ்வரன், பாசிதாபானு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். பேராசிரியை சுப்ரியா நன்றி கூறினார்.
