/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆய்வுக்கூட்டம் சொதப்பல் மகளிர் குழுவினர் தவிப்பு
/
ஆய்வுக்கூட்டம் சொதப்பல் மகளிர் குழுவினர் தவிப்பு
ADDED : பிப் 22, 2024 05:44 AM
பல்லடம்: தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவி குழுவினர் தயாரித்த பொருட்களின் கண்காட்சி மற்றும் ஆய்வு கூட்டம், அருள்புரத்தில் நேற்று நடந்தது. மத்திய அரசின் தேசிய பணி மேலாளர் ராஜீவ் குமார் சின்ஹா, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கூடுதல் இயக்குனர் கவிதா ஆகியோர் ஆய்வு மேற்கொள்வதாக இருந்தது.
மதியம் 1.00 மணிக்கு கண்காட்சி மற்றும் ஆய்வுக் கூட்டம் நடப்பதாக இருந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மகளிர் சுய உதவி குழுவினர், மதியம் 12:00 மணிக்கு முன்பாகவே தயாராக இருந்தனர். அதிகாரிகளை வரவேற்பதற்காக, வாழை மர தோரணம் கட்டப்பட்டு, பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. திடீரென வாழை மர தோரணமும், பிளக்ஸ் பேனரும் அகற்றப்பட்டன. மதிய உணவு இடைவேளை முடிந்து நிகழ்ச்சி நடப்பதாக கூறப்பட்ட நிலையில், மாலை வரை மகளிர் குழுவினர் வழிமேல் விழி வைத்து காத்திருந்த நிலையில் அதிகாரிகள் யாரும் வரவில்லை.
இதனால், ஏறத்தாழ ஐந்து மணி நேரத்துக்கு மேலாக மகளிர் சுய உதவி குழுவினர் அதிகாரிகளுக்காக காத்திருந்தனர். மாலை, 5.00 மணிக்கு மேல் ஆய்வு கூட்டம் நடந்ததாக கூறப்பட்டது. குறித்த நேரத்தில் நிகழ்ச்சி நடக்காமல், அதிகாரிகள் வருகை குறித்தும் தகவல் இன்றி, சொதப்பலுடன் நடந்த ஆய்வு கூட்டத்தால், மகளிர் சுய உதவி குழுவினர் அவதிக்குள்ளாகினர்.