/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பருத்தி சாகுபடி ஊக்குவிக்க மானியம்
/
பருத்தி சாகுபடி ஊக்குவிக்க மானியம்
ADDED : ஆக 09, 2024 02:42 AM
உடுமலை;பருத்தி சாகுபடி விவசாயிகளுக்கு, பல்வேறு திட்டங்களின் கீழ், இடு பொருட்கள் மற்றும் மானிய தொகை வழங்கப்படும், என வேளாண் துறை அறிவித்துள்ளது.
குடிமங்கலம் வட்டாரத்தில், தென்மேற்கு பருவ மழை காலங்களில், ஆக., முதல் செப்.,வரை, மானாவாரியாக 400 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பு, 2024-25ம் ஆண்டில், பருத்தி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், 'லாபகரமான பருத்தி சாகுபடி இயக்கம்' திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு இடு பொருட்கள், மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் உயர் விளைச்சல் பருத்தியை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நுண்ணுயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள், டி.விரிடி போன்ற இடு பொருட்களுடன், விதைக்கான பின்னேற்பு மானியத்தொகையாக, ஹெக்டேருக்கு, ரூ. 4,900 வழங்கப்படுகிறது.
அதே போல், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை திட்டத்தின் கீழ், ஹெக்டேருக்கு, 1,400 ரூபாயும், டிரோன் வாயிலாக பருத்திக்கு மருந்து தெளிக்கும் விவசாயிகளுக்கு, தெளிப்பு கூலியாக, 4 ஹெக்டேருக்கு, ரூ.1,200 வீதம், பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
வேளாண் சுற்றுச்சூழல் சார்ந்த பயிர் மேலாண்மையின் கீழ், விவசாயிகளுக்கு வரப்பு பயிராக விதைக்க, உளுந்து விதை, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா உள்ளிட்ட நுண்ணுாட்டங்களுடன், நுனி கிள்ளுதல் செலவின தொகைக்காக, ஒரு ஹெக்டேருக்கு, ரூ. 4,200, பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
பருத்தி சாகுபடி விவசாயிகள், மேலும் விபரங்களுக்கு, உதவி வேளாண் அலுவலர் செந்தில்குமார், 83449 09080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை, வேளாண் உதவி இயக்குனர் வசந்தா தெரிவித்துள்ளார்.