/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொடர் பாதிப்புகளால் இனிக்காத கரும்பு! தொழிலாளர்களுக்கும் வேதனை
/
தொடர் பாதிப்புகளால் இனிக்காத கரும்பு! தொழிலாளர்களுக்கும் வேதனை
தொடர் பாதிப்புகளால் இனிக்காத கரும்பு! தொழிலாளர்களுக்கும் வேதனை
தொடர் பாதிப்புகளால் இனிக்காத கரும்பு! தொழிலாளர்களுக்கும் வேதனை
ADDED : ஜூன் 04, 2025 12:26 AM

உடுமலை,; ஏழுகுள பாசன பகுதிகளில், கரும்பு அறுவடை பணிகள் துவங்கியுள்ளது; கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்காததால், வெல்ல உற்பத்திக்காக கரும்பை விற்பனை செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
உடுமலை ஏழு குள பாசன பகுதிகளான பள்ளபாளையம், போடிபட்டி, வடபூதனம், சுண்டக்காம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் முன்பு கரும்பு சாகுபடி பிரதானமாக இருந்தது.
இங்கு உற்பத்தியாகும் கரும்பை, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விற்பனைக்கு அனுப்பி வந்தனர். இதற்காக ஆலைக்கும், விவசாயிகளுக்கும் ஒப்பந்தம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், இயந்திரங்களை நவீனபடுத்தாமல் விட்டது உள்ளிட்ட காரணங்களால், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கவில்லை. இதனால், விவசாயிகள் மாற்று வழிகளில், கரும்பை விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக விளைநிலங்களில், ஆலை அமைத்து, வெல்லம் உற்பத்தி செய்து வந்தனர். ஓணம் சீசனில் உடுமலை வெல்லத்துக்கு அதிக கிராக்கியும் இருந்தது. பெருந்தொற்று காலத்தில், வெல்லம் விற்பனையும் பாதித்தது.
தொடர் நஷ்டத்தை சந்தித்த ஏழு குள பாசன திட்ட கரும்பு விவசாயிகள், மாற்றுச்சாகுபடிக்கு செல்லத்துவங்கினர். தற்போது குறைந்த பரப்பளவிலேயே கரும்பு சாகுபடியாகிறது. இந்த கரும்பும், சுற்றுப்பகுதிகளில், வெல்லம் உற்பத்தி செய்பவர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சாகுபடி பரப்பு குறைந்துள்ளதால், அறுவடை சீசனில், நுாற்றுக்கணக்கான கரும்பு வெட்டு தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர். முன்பு, பற்றாக்குறை ஏற்பட்டு, பிற மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவார்கள்.
நடப்பாண்டும் விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் உடுமலை பகுதிக்கு வந்துள்ளனர்; ஆனால், அவர்களுக்கு போதிய வேலை கிடைக்காமல் ஏமாற்றமடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: கரும்பு சாகுபடியில் கடந்த சில ஆண்டுகளாக தொடர் பாதிப்பை சந்தித்து வருகிறோம். இந்தாண்டு வெல்ல உற்பத்தியாளர்கள் கரும்பை கொள்முதல் செய்கின்றனர்.
தற்போது ஒரு டன் கரும்பு, 3,800 - 4,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. விலை உயரும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். சாகுபடி பரப்பை அதிகரிக்க தமிழக அரசு வேளாண்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.