சுக்ரீஸ்வரர் கோவில் பகுதியில் அடிப்படை வசதிகள் அவசியம்
சுக்ரீஸ்வரர் கோவில் பகுதியில் அடிப்படை வசதிகள் அவசியம்
ADDED : செப் 11, 2026 04:59 AM
ஊத்துக்குளி: ஊத்துக்குளி சாலையில், சுக்ரீஸ்வரர் கோவில், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு விளக்கு, சாலை பராமரிப்பு, கழிவுநீர் மேலாண்மை போன்ற அடிப்படை பிரச்னைகளுடன், விசேஷ நாட்களில் போக்குவரத்து நெரிசலும் நிலவுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஊத்துக்குளி சுக்ரீஸ்வரர் கோவில் செல்லும் சாலையில், பல இடங்களில் தெரு விளக்குகள் ஒளிர்வதில்லை. இதனால், இரவில், மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கோவிலை ஒட்டிய சாலை, முற்றிலும் சேதமடைந்துள்ளது. கோவில் எதிர்புறம் தெற்கு நோக்கி செல்லும் மண் பாதை, பஞ்சாயத்துக்கு உட்பட்டதா அல்லது தனியாருக்கு சொந்தமானதா என்பதை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சாலை புதுப்பிப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.
கோவில் பகுதியைச் சுற்றி, கழிவுநீர் சரியாகச் செல்ல வழியின்றி தேங்குவதால், அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குளத்துப்பாளையம் சோதனைச் சாவடி பகுதியில் மட்டுமே ஓரிரு காவலர்கள் இருக்கும் நிலையில், 2-வது ரயில்வே கேட் பகுதியில் இருந்து, அவ்வப்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போதிய போலீசாரை பணியமர்த்த வேண்டும்; குறிப்பாக, கோவில் விழா நாட்கள், முக்கிய விசேஷ நாட்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, அப்பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூறினர்.
