/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோடை உழவு செய்தால் நன்மைகள் அதிகம்; வேளாண் துறை அறிவுறுத்தல்
/
கோடை உழவு செய்தால் நன்மைகள் அதிகம்; வேளாண் துறை அறிவுறுத்தல்
கோடை உழவு செய்தால் நன்மைகள் அதிகம்; வேளாண் துறை அறிவுறுத்தல்
கோடை உழவு செய்தால் நன்மைகள் அதிகம்; வேளாண் துறை அறிவுறுத்தல்
ADDED : மே 18, 2025 10:15 PM
உடுமலை; மழை துவங்கியுள்ள நிலையில், விவசாயிகள் நிலங்களை பண்படுத்தி கோடை உழவு மேற்கொள்ள வேண்டும், என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
கோடை மழை துவங்கியுள்ள நிலையில், இதனை பயன்படுத்தி நிலங்களை உழவு செய்து பண்படுத்தி, சாகுபடி மேற்கொள்ளலாம். கோடை காலத்தில் நிலத்தின் மேல் மட்ட மண் அதிக வெப்பமடைகிறது.
இந்த வெப்பம் கீழ்ப்பகுதிக்கு செல்லும் போது, நிலத்தடி நீர் ஆவியாகி வெளியேறிவிடும். எனவே, கோடை காலங்களில் பெய்யும் மழை நீரானது, பூமிக்குள் செல்ல வழி ஏற்படுத்தி, நிலத்தில் சேமிக்க கோடை உழவு மிகவும் அவசியமானதாகும்.
கோடை உழவு செய்யும் போது, உண்டாகும் அதிக காற்றோட்டத்தினால், மண்ணிலுள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளின் எஞ்சிய நஞ்சுகள் சிதைக்கப்படுகிறது. மேலும், காற்று மண்டலத்திலுள்ள நைட்ரஜன் மழை நீருடன் சேர்ந்து மண்ணிற்குள் செல்வதால், மண்ணின் அங்கக சத்து அதிகரிக்கும்.
கோடை உழவு செய்யாத கெட்டியான நிலத்தில் விழும் மழை நீரானது, மண் அரிப்பை ஏற்படுத்தி வேகமாக நிலத்தில் உருண்டோடி, வீணாகிறது. பெரும்பாலும் மானாவாரி நிலங்களில் மண் கடினமானதாக இருக்கும்.
கோடை உழவு செய்யும் போது, மண் இறுக்கம் குறையும். மண்ணை புழுதிபட உழுவதால், மண் வளம் பெருகும். காற்றோட்டம் அதிகரித்து, நீர் ஊடுறுவி நிலத்திற்குள் செல்கிறது. நிலத்தை ஆழமாக உழுவதால், 15 செ.மீ., வரை மண்ணுக்குள் மழை நீர் செல்கிறது.
அறுவடை செய்யப்பட்ட வயல்களில் உள்ள அடித்தாள்கள், வேர்கள் ஆகியவை கோடை உழவின் போது, மடக்கு உழப்படுவதால், மண்ணின் சத்து அதிகரித்து, மண்ணிலுள்ள நன்மை செய்யும் உயிரினங்களின் செயல்பாடுகள் அதிகரிக்கிறது. களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது; பயிர்களுக்கு தீமை செய்யும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு, பறவைகளுக்கு உணவாகிறது.
மேலும், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில், கோடை உழவு மேற்கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இதனால், நிலத்தடியிலுள்ள கூட்டுப்புழுக்கள் மற்றும் இதர பூச்சிகளின் முட்டைகள் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்பட்டு, சூரிய வெப்பத்தின் காரணமாக அழிந்து விடும்.
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த கோடை உழவு மிகவும் சிறந்தது. இதனால், புழுக்கள், அத்துபூச்சிகள் மற்றும் மூன்றாம் கட்ட படைப்புழுக்கள் மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டு, பறவைகளுக்கு உணவாகிறது.
இயற்கையான முறையில் படைப்புழுக்களை கட்டுப்படுத்த சிறந்த வழி, கோடை உழவாகும். விவசாயிகள், வரும் பருவ கால சாகுபடியில் அதிக மகசூல் பெற கோடை உழவு செய்ய வேண்டும்.
அடியுரமாக ஏக்கருக்கு, இரண்டு மூட்டை சூப்பர் பாஸ்பேட் வாங்கி, மக்கிய தொழு உரத்துடன் கலந்து வைத்து, கடைசி உழவின் போது, நிலத்திற்கு போட வேண்டும், என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.