பாலிதீன் என்றொரு அரக்கன்!
பாரம்பரியமும், பழக்க வழக்கமும் அதன் அடையாளம் மாறாமல் இருந்தாலும், காலத்துக்கேற்ப அதில் சில மாற்றங்கள் இருக்கத் தான் செய்கின்றன.
மண்ணையும், நீரையும் போற்றிப் புகழும் வகையில், நான்கு நாள் குதுாலகலமாய் நடந்து முடிந்த பொங்கல் விழாவில், மண் வளத்தை நாசக்கேடாக்கும் பாலிதின் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு அறைகூவலும் ஆங்காங்கே ஒலித்தன.'பாலிதீன் மண்ணுக்கு கேடு' என்பது அறிவியல் உண்மை; ஆனால் அதன் உற்பத்தியை தடுக்க சட்டத்தில் இடமில்லை என்பது, அரசியல் கொள்கை. அப்படியிருக்க, அதன் உற்பத்தியை தடை செய்யுங்கள் என, உரக்க சொல்வதை, அதை வாங்காமல் புறக்கணித்து அமைதியாக கடந்து போவது தான், அறிவார்ந்த செயல்.அந்த மனநிலையில், திருப்பூர் நகர மற்றும் ஊரகப்பகுதிகளில், குப்பை மேலாண்மை என்பது, பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான விழிப்புணர்வை, பள்ளிகள் தோறும் ஏற்படுத்தி வருகிறது, மாவட்ட நிர்வாகமும், திருப்பூர் மாநகராட்சியும்.திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமல்படுத்தப்பட்டு, வீடு, வணிக நிறுவனங்கள், ஓட்டல் உள்ளிட்ட அனைத்து இடங்களில் இருந்தும், குப்பை தரம் பிரித்து வாங்கும் பணி துவங்கியிருக்கிறது. மாநகராட்சி சார்பில், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில், திடக்கழிவு மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதே போன்று, ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

