தாலுகா அலுவலகம் முற்றுகை; மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
தாலுகா அலுவலகம் முற்றுகை; மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
ADDED : பிப் 28, 2026 07:29 AM

உடுமலை: மாற்றுத்திறனாளி விவசாயிக்கு, பாசன நீர் பெற்று தர வலியுறுத்தி, உடுமலை தாலுகா அலுவலகத்தை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தினர் முற்றுகையிட்டுபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுமலை தாலுகா அலுவலகத்தை, நேற்று காலை அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தினர் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறியதாவது: உடுமலை புங்கமுத்துார் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல். மாற்றுத்திறனாளி. இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்துக்கு, பி.ஏ.பி., பாசன நீர் பாய்ச்சவிடாமல், அப்பகுதியை சேர்ந்த சிலர் மிரட்டி அச்சுறுத்தி வருகின்றனர்.
விளைநிலத்துக்கு வரும் அரணி வாய்க்காலையும் அடைத்துள்ளனர். இதனால், சாகுபடி செய்ய முடியாமல் மாற்றுத்திறனாளி பாதித்துள்ளார்.
இது குறித்து பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாற்றுத்திறனாளியின் வாழ்வாதாரமான விவசாயத்துக்கு முறையாக பாசன நீர் கிடைக்க செய்ய வேண்டும்.
அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர். மாற்றுத்திறனாளிகளின் திடீர் போராட்டத்தால் உடுமலை தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
