/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூட்டிக்கிடக்கும் தாலுகா ஆதார் மையம்; பணியாளர்கள் செயலால் வேதனை
/
பூட்டிக்கிடக்கும் தாலுகா ஆதார் மையம்; பணியாளர்கள் செயலால் வேதனை
பூட்டிக்கிடக்கும் தாலுகா ஆதார் மையம்; பணியாளர்கள் செயலால் வேதனை
பூட்டிக்கிடக்கும் தாலுகா ஆதார் மையம்; பணியாளர்கள் செயலால் வேதனை
ADDED : ஜன 30, 2024 11:49 PM

உடுமலை:நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும், தாலுகா அலுவலக இ- சேவை மையம் பூட்டிக்கிடந்தது, மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் அட்டை உள்ளது. பள்ளி முதல் கல்லுாரி வரை பயிலும் மாணவர்களுக்கும், மக்களுக்கும் ஆதார் அத்தியாவசிய தேவையாக உள்ளது.
இந்த ஆதார் அட்டையை மக்கள் எளிதில் பெறும் வகையில், மாநில அரசு தாலுகா, நகராட்சி அலுவலகங்களில் இ-சேவை மையம் அமைத்து செயல்படுத்தி வருகிறது. இதன் வாயிலாக, பொதுமக்கள் பெருமளவில் பயன்பெற்று வருகின்றனர்.
அவ்வகையில்,தமிழ்நாடு அரசு கேபிள் வாரியம் சார்பில், உடுமலை தாலுகா அலுவலகத்தில், இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்கு, உடுமலை தாலுகாவுக்குட்பட்ட, 85க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு சேவைகளுக்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக ஆதார் அடையாள அட்டை திருத்தம், புதிதாக பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக நாள்தோறும் காலை, 7:00 மணி முதல் மக்கள் காத்திருக்கின்றனர்.
போதிய சேவை மையங்கள் இல்லாததால், தாலுகா அலுவலகத்திலுள்ள இ - சேவை மையத்தை மட்டுமே இத்தகைய சேவைகளுக்கு மக்கள் நம்பியுள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக, இ-சேவை மையம் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.
இதனால் அவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.பெயரளவுக்கு, இரண்டு நாட்கள் ஆதார் மையம் விடுமுறை என, அறிவிப்பை கதவில் ஒட்டி வைத்துள்ளனர். இது குறித்து தெரியாமல், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கிராம மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த அரசு சார்ந்த அலுவலகத்துக்கு, எதற்காக விடுமுறை விடப்பட்டது என தெரியவில்லை. அருகிலுள்ள பிரிவு ஊழியர்களிடம் விசாரித்தால், பணியாளர் விடுமுறை காரணமாக மையம் மூடப்பட்டுள்ளது என, தெரிவிக்கின்றனர்.
மாற்று பணியாளர்கள் நியமித்து, மக்களுக்கான சேவையை தொடர்ந்திருக்கலாம்; அல்லது மையம் மூடப்பட்டதற்கான காரணத்தை, வெளிப்படையாக மக்களுக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.
ஆனால், மையத்தை அலட்சியமாக பூட்டிச்சென்றுள்ளனர். இதனால், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால், இ-சேவை மையத்தில், சேவை முறையாக கிடைக்காது என, மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் மனுவும் அனுப்பியுள்ளனர்.மாநில அரசும் இப்பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.