/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தமிழ் புத்தாண்டு; கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் வழிபாடு
/
தமிழ் புத்தாண்டு; கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் வழிபாடு
தமிழ் புத்தாண்டு; கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் வழிபாடு
தமிழ் புத்தாண்டு; கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் வழிபாடு
ADDED : ஏப் 14, 2025 10:20 PM

- நிருபர் குழு -
தமிழ்ப்புத்தாண்டு தினமான நேற்று பொள்ளாச்சி, உடுமலை கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. திருமூர்த்திமலை உள்ளிட்ட புண்ணிய நதிகளிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து, சுவாமிகளுக்கு அபிேஷகம் செய்து வழிபட்டனர்.
தமிழ்ப்புத்தாண்டு தினமான நேற்று, வீடுகளில், மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு வகை கனிகள் வைத்து, வளம் பெருக வழிபாடு நடத்தினர்.
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், விநாயகப்பெருமான் சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தில்லை நகர் ரத்தினலிங்கேஸ்வரர், பழங்கள் அலங்காரத்திலும், சீரடி ஸ்ரீ ஆனந்த சாயி பழங்கள் அலங்காரத்திலும், ருத்ரப்பநகர் சித்திவிநாயகர் கோவிலில், சந்தனக்காப்பு, பழங்கள் அலங்காரத்திலும் சுவாமிகள் எழுந்தருளினர்.
திருமூர்த்திமலை தீர்த்தம் பிரசித்தி பெற்றது என்பதால், நேற்று, பல்வேறு மாவட்ட கிராமங்களை சேர்ந்த, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தம் எடுக்க வாகனங்களில் திரண்டனர்.
மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் நீராடி, கிராமங்களிலுள்ள சுவாமிகளுக்கு அபிேஷகம் செய்ய, குடங்களில் புனித நீர் எடுத்து, மந்திரங்கள் கூறி, சக்தி கரகம், தீர்த்தம் அமைத்து, பாரம்பரிய வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
* உடுமலை அருகே சலவநாயக்கன்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ மகா சக்தி மாசாணியம்மன் கோவில் உள்ளது. கோவிலில், தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று காலை 8:00 மணிக்கு கணபதி ேஹாமம் நடந்தது. தொடர்ந்து, 108 விளக்கு பூஜையும், அம்மனுக்கு 18 திரவிய அபிேஷகங்களும், அஸ்வினி தீர்த்த அபிேஷகம்; கலச தீர்த்த பூஜைக்கு பிறகு, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜையில், சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ மகா சக்தி மாசாணியம்மனை தரிசனம் செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே சூலக்கல் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கனிகள் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
* பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில், தமிழ் புத்தாண்டையொட்டி கனகாபிேஷகம் நடந்தது. காலை, 5:10 மணி முதல் மங்கள இசை, திருபள்ளியெழுச்சி, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து, 16வகையான அபிேஷகம் நடந்தது. அதன் பின்னர், பொற்காசுகளால், கனகாபிேஷகம் நடந்தது. பக்தர்களுக்கு கனகாபிேஷக காசுகள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
* ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ரூபாய் நோட்டு அலங்காரத்தில் தாயாருடன் பெருமாள் அருள்பாலித்தார்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள பொன்மலை (கனககிரி) வேலாயுத சுவாமி கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், பக்தர்கள் பலர் பங்கேற்று சஷ்டி பாராயணம் மற்றும் முருக பக்தி பாடல்கள் பாடி சுவாமியை தரிசனம் செய்தனர்.
சிவலோக நாயகி உடனமர் சிவலோகநாதர் கோவிலில் சித்திரை திருநாளான நேற்று சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது.
கிணத்துக்கடவு பெரியார் நகரில் உள்ள பால விநாயகர் கோவிலில், விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது.
வால்பாறை
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:30 மணிக்கு பால், இளநீர், சந்தனம், திருநீறு, பன்னீர், தேன்,நெய் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது.
காலை,7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் முருகன், வள்ளி, தெய்வானையோடு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவில், வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவில், காமாட்சியம்மன்கோவில், கருமலை பாலாஜிகோவில், சோலையார் சித்திவிநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தமிழ்புத்தாண்டு தினமான நேற்று காலை முதல் சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தன.

