/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'முன்னேறிய நாகரிகத்துடன் திகழ்ந்த தமிழர்கள்'
/
'முன்னேறிய நாகரிகத்துடன் திகழ்ந்த தமிழர்கள்'
ADDED : பிப் 08, 2024 06:23 AM

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், இலக்கிய கருத்தரங்கம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் (பொறுப்பு) புவனேஸ்வரி வரவேற்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமை வகித்து பேசுகையில், 'நாகரிகமற்ற பிற பகுதிகளில் மனிதர்கள் வாழ்ந்தபோதே, தமிழகத்தில், முன்னேறிய நாகரிகம் இருந்துள்ளது.
முந்தைய காலங்களில், இந்தியா முழுவதும் தமிழர்கள்தான் பரவியிருந்தனர். பின்னர், நிரந்தரமாக தென் பகுதியில் குடியமர்ந்துவிட்டனர்,' என்றார்.
கவிஞர் சிவதாசன், தமிழக தமிழாசிரியர் கழக மாவட்ட தலைவர் தங்க வேல், வாகை மாலை தமிழ் இலக்கிய பேரவை தலைவர் கண்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
கருத்தரங்க அமர்வில், கோவை அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவன உதவி பேராசிரியர் குருஞானாம்பிகா, எழுத்தாளர் அனிதா கிருஷ்ணமூர்த்தி, நல்லாசிரியர் விருது பெற்ற நாராயண மூர்த்தி ஆகியோர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்களின் சிறப்புகள் குறித்து பேசினர்.
தமிழறிஞர்கள் அவிநாசிலிங்கம், உடுமலை நாராயண கவி, புலவர் பழனிச்சாமி ஆகியோரின் வாரிசுகள் கவுரவிக்கப்பட்டனர்.
தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் பிறந்தநாளை முன்னிட்டு, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு தனித்தனியே பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கான போட்டியில், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் வசந்தகுமார் முதலிடம்; உடுமலை ஸ்ரீ விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷாரு இரண்டாமிடம்; பிச்சம்பாளையம் புதுார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி கார்த்திகா மூன்றாமிடம்.
கல்லுாரி மாணவர்களுக்கான போட்டியில், பல்லடம் புரட்சி தலைவி அம்மா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவன் ஸ்டீபன் சங்கர் தாஸ் முதலிடம்; நிப்ட்-டீ பேஷன் கல்லுாரி மாணவி ஷாலினி இரண்டாமிடம்; உடுமலை அரசு கல்லுாரி மாணவர் அன்வர் அலி மூன்றாமிடம் பிடித்தனர்.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, நிகழ்ச்சியில், ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

