ADDED : ஜன 21, 2025 11:55 PM
திருப்பூர்; செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி மேம்பட, புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டுமென, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தியாவின், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், திருப்பூரின் பங்களிப்பு, 55 சதவீதமாக உள்ளது; நாடு முழுவதும் இயங்கும் உள்நாட்டு சந்தையிலும், திருப்பூரில் உற்பத்தியாகும் ஆடைகளே அதிகம் இடம்பெற்றுள்ளன. பருத்தி நுாலிழை ஆடை உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த திருப்பூர், கடந்த இரண்டு ஆண்டுகளாக, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியிலும் கால்பதித்துவிட்டது. மொத்த உற்பத்தியில், 20 சதவீதம் அளவுக்கு செயற்கை நுாலிழை ஆடைக்கு மாறி வருகின்றனர்.
சர்வதேச சந்தைகளில், இந்தியாவுக்கு போட்டியாக உள்ள நாடுகள், செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியில் முந்திச்செல்கின்றன. அந்த நாடுகளுடனான போட்டியை ஈடுகட்ட, நாமும் செயற்கை நுாலிழை ஆடை வடிவமைப்புக்கு மாறியே ஆக வேண்டும் என்று, ஆர்வத்துடன் களமிறங்கியுள்ளனர். இருப்பினும், செயற்கை நுாலிழை உற்பத்தி, துணி உற்பத்தி, பதப்படுத்துதல், ஆடை வடிவமைப்பு, மதிப்பு கூட்டிய ஆடை உற்பத்தியில், சரியான வழிகாட்டுதல் இல்லை. புதிய தொழில்நுட்பங்கள் வாயிலாக, சர்வதேச தரத்துடன் ஆடை உற்பத்தி செய்ய, தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அவசியம் என்று, திருப்பூர் ஏற்றுமதியாளர் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், 'தோல் ஆராய்ச்சி நிறுவனம் இயங்குவது போல், பின்னலாடை உற்பத்தி மற்றும் மேம்பாட்டுக்கு, புதிய தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டுமெனவும், கோரிக்கை வைத்துள்ளோம். மற்ற தொழில்களுக்கு இருப்பது போல், அதிகபட்ச வேலை வாய்ப்பு அளிக்கும் பனியன் தொழில் மேம்பட, பின்னலாடை வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும்,' என்றனர்.
தேசிய பின்னலாடைவளர்ச்சி வாரியம்
அன்னிய செலாவணி ஈட்டுவதில், பின்னலாடை ஏற்றுமதி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில், திருப்பூர் கிளஸ்டர் பெரும்பான்மை பங்கு வகிக்கிறது. பின்னலாடை தொழில் என்பது, மத்திய, மாநில அரசுகளின் நேரடி கண்காணிப்பில் இயங்க வேண்டும். தேவைகளை உடனுக்குடன், அரசு மூலமாக நிறைவேற்ற ஏதுவாக, தேசிய பின்னலாடை வளர்ச்சி வாரியம் உருவாக்க வேண்டும் என்பது, திருப்பூரின் நீண்ட நாளைய எதிர்பார்ப்பு. இந்த பட்ஜெட்டிலாவது நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.
மத்திய, மாநில அரசு பட்ஜெட்டில், திருப்பூர் பின்னலாடை தொழில்துறையின் நீண்டநாள் எதிர்பார்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என, தொழில்துறையினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்