ADDED : ஜூன் 04, 2026 08:31 AM

திருப்பூர்: இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின், திருப்பூர் கிளை சார்பில், 2வது ஆண்டு கருத்தரங்கு மற்றும் திருப்பூர் கிளையின் ஆண்டு நிறுவன தினவிழா, நேற்று, 'ஐ.சி.ஏ.ஐ., பவன்' அரங்கில் நடந்தது.
காலை முதல் மாலை வரை நடந்த கருத்தரங்கில், 350க்கும் மேற்பட்ட ஆடிட்டர்கள் பங்கேற்றனர். துவக்க விழாவில், தென்னிந்திய பிராந்தியக் குழு தலைவர் சுப்பாராவ் முப்பளா தலைமை வகித்தார். பிராந்திய குழு உறுப்பினர் அருண் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மூன்று தொழில்நுட்ப அமர்வுகளில், வல்லுனர்கள் பேசினர். 'என்.எப்.ஆர்.ஏ.,' மற்றும் பிற ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் குறித்து, பெங்களூருவை சேர்ந்த விகாஸ் ஓஸ்வால்; இரண்டாவது அமர்வில், கார்ப்பரேட் அல்லாத நிறுவனங்களுக்கான நிதிநிலை அறிக்கைகளை முறையாக வடிவமைப்பது குறித்து, சென்னையை சேர்ந்த சின்னசாமி கணேசன்; 'வருமான வரிச் சட்டம் 2025ன் கீழ் மூலதன ஆதாயம் - தாக்கப் பகுப்பாயவும் வரித் திட்டமிடல் உத்திகளும்' என்ற தலைப்பில் சென்னையைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர். உறுப்பினர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
திருப்பூர் கிளை தலைவர் விஷ்ணுகுமார், ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன், செயலாளர் சபரிஷ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
