/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தொழில்நுட்ப ஜவுளியால் உலக சந்தை வசமாகும்'
/
'தொழில்நுட்ப ஜவுளியால் உலக சந்தை வசமாகும்'
ADDED : ஜூலை 22, 2025 11:05 PM

திருப்பூர்; தமிழ்நாடு - - -தைவான் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி கலந்துரையாடல்நிகழ்ச்சி, கோவை மற்றும் திருப்பூரில் இருநாட்கள் நடந்தது. இரண்டாவது நாளான நேற்று, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில், ஏற்றுமதியாளர்களின் நேர்முக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்துக்கு வருகை தந்த, தைவான் குழுவினரை, கவுரவ தலைவர் சக்திவேல் வரவேற்று, பேசுகையில், ''பிரிட்டன் ஒப்பந்தத்தை தொடர்ந்து, ஐரோப்பாவுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தமும், இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தை மென்மேலும் உயர்த்தும். தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியால், உலக சந்தைகளில் போட்டியிடுவது எளிதாகும்,'' என்றார்.
செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி குழுவின் தலைவர் அருண்ராமசாமி பேசுகையில், ''தைவான் குழுவினரின் தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான சந்திப்பு, தொழில் வளர்ச்சிக்கு உதவும். இதன்மூலமாக, தைவானுடன் புதிய தொடர்பை உருவாக்கி, தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தி செயல்முறைகளை மேம்படுத்தலாம்,'' என்றார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின், தமிழக ஜவுளி பிரிவு கன்வீனர் கோபிகுமார் பேசுகையில், ''இந்திய தொழில் கூட்டமைப்பு, 2022 முதல் தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. தைவான் மற்றும் தமிழ்நாட்டின் தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்புகள், இயற்கையான ஒற்றுமையுடன் விளங்குகின்றன. தொழில்நுட்ப ஜவுளியில் தைவானின் தனித்துவம், தமிழக ஜவுளித்துறைக்கு மிகுந்த பயளிக்கும், என்றார்
தைவான் ஜவுளி கூட்டமைப்பு தலைவர் ஜஸ்டின் ஹுவாங், ''தொழில்நுட்ப ஜவுளித் துறையில் தைவான் முன்னோடியாக இருக்கிறது; இதனால், தமிழகமும் பயனடையலாம். தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியில் புத்தாக்க கண்டுபிடிப்புகள், இந்திய ஜவுளி உற்பத்திக்கு மிகுந்த ஏற்புடையதாக இருக்கும்,'' என்றார்.
தமிழக ஜவுளித் துறையின் இணை இயக்குனர்கள் சக்தி விஜயலட்சுமி, ராகவன் ஆகியோர், தொழில்நுட்ப ஜவுளி மற்றும் அதனை மேம்படுத்தும் அரசின் நடவடிக்கையை விளக்கி பேசினர். அதன்பின், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் தைவான் குழுவினர் இடையேயான, நேரடி வர்த்தக கலந்துரையாடல் நடந்தது; ஒவ்வொரு நிறுவனத்தினரும், நேரடியாக பேசி, புதிய ஆர்டர் தொடர்பாக கலந்துரையாடினர்.