/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உடுமலை அருகே கோவில் சிலை உடைப்பு; பொதுமக்கள் ஆவேசம்
/
உடுமலை அருகே கோவில் சிலை உடைப்பு; பொதுமக்கள் ஆவேசம்
உடுமலை அருகே கோவில் சிலை உடைப்பு; பொதுமக்கள் ஆவேசம்
உடுமலை அருகே கோவில் சிலை உடைப்பு; பொதுமக்கள் ஆவேசம்
ADDED : ஆக 16, 2025 12:25 AM

உடுமலை; உடுமலை அருகே, ஜல்லிபட்டியில் சுவாமி சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள ஜல்லிபட்டியில், திருமூர்த்தி அணையின் ஒரு பகுதியில், கரட்டு பெருமாள் கோவில் அடிவாரத்தில், ஜக்கம்மாள் கோவில் உள்ளது. இங்கு, சித்தி விநாயகர், அர்த்தநாரீஸ்வரர், ஜக்கம்மாள் சுவாமிகள் எழுந்தருளி வருகின்றனர்.
இக்கோவிலில், ஆடி வெள்ளி தினமான நேற்று, சிறப்பு பூஜைகள், திருவிளக்கு பூஜை நடத்த கோவில் நிர்வாகத்தினர் திட்டமிட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம், நள்ளிரவு இக்கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அர்த்தநாரீஸ்வரர் சுவாமி சிலையின் முகத்தை உடைத்தும், அலங்காரத்தை சிதைத்துள்ளனர். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கோவிலுக்கு சென்ற பொதுமக்கள், இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதைக்கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், உடுமலை - திருமூர்த்திமலை ரோடு, ஜல்லிபட்டி நான்கு ரோடு சந்திப்பில், ரோடு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் கூறியதாவது: திருமூர்த்தி அணை கட்டப்பட்டபோது, நுாற்றாண்டுகள் பழமையான சுவாமி சிலைகள் பூமிக்கு அடியிலிருந்து கிடைத்தன. இந்த சுவாமிகளுக்கு கோவில் கட்டி வழிபட்டு வருகிறோம். இரு ஆண்டுக்கு முன், ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள், தங்களுக்கு பாத்தியப்பட்டது, என பிரச்னை செய்தனர். ஊர் மக்கள் அனைவரும் இணைந்து, வழிபடலாம் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அவர்கள் தொடர்ந்து பிரச்னை செய்ததால், கோட்டாட்சியர் விசாரணை நடந்து வருகிறது. அதிகாரிகள், போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், நேற்று அர்த்தநாரீஸ்வரர் சுவாமி சிலை உடைக்கப்பட்டது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என ஆவேசமாக கூறினர்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த, கோட்டாட்சியர் குமார், டி.எஸ்.பி., நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ''குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என உறுதியளித்தனர்.
இதனையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், பிரதான ரோட்டில், காலை, 10:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை போக்குவரத்து பாதித்தது.