/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் நில விவகாரம்; அமைதிப் பேச்சுவார்த்தை
/
கோவில் நில விவகாரம்; அமைதிப் பேச்சுவார்த்தை
ADDED : பிப் 23, 2024 12:15 AM

அவிநாசி;அவிநாசி ஒன்றியம், வேலாயுதம்பாளையத்தில், கோவில் நில விவகாரம் தொடர்பாக, தாலுகா அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
தாசில்தார் மோகனன் தலைமை வகித்தார். வேலாயுதம்பாளையம் ஏ.டி., காலனியில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வழிபட கருப்புசாமி மற்றும் கன்னிமார் கோவில் உள்ளது.
இதில், கோவிலுக்கு அருகே வசித்து வரும் ஒருவர், தனது வீட்டுக்குச் செல்ல வழி இல்லாமல் உள்ளதாக தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், கோர்ட்டின் உத்தரவின்படி, குறிப்பிட்ட அளவு அவரது வீட்டுக்கு செல்ல வழி அமைக்க கோர்ட் உத்தரவிட்டது.
அதனால்,கோவிலுக்கு சொந்தமான மேற்கூரை மற்றும் வேல் ஆகியவற்றை அகற்றி உள்ளனர். இதையறிந்த, பொதுமக்கள், கோவில் நிலத்தை மீட்டு தர வேண்டி தாசில்தாரிடம் மனு அளித்திருந்தனர். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதற்கிடையில் கோவில் திருவிழா நடைபெற உள்ளதால், அகற்றப்பட்ட வேல், மேற்கூரை ஆகியவற்றை மீண்டும் அமைத்து தர வேண்டும் என அப்பகுதியினர் கேட்டு வந்தனர்.
இப்பிரச்னைக்காக, நேற்று அவிநாசி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மோகனன் தலைமையில், டி.எஸ்.பி., சிவகுமார் முன்னிலையில், இரு தரப்பினருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதில் வருவாய்த்துறை பதிவேட்டில் கிணறு இருந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லாததால் இப்பகுதியை இரு தரப்பினரும் பொதுவில் உபயோகப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி இரு தரப்பினரிடமும் ஒப்புதல் பெறப்பட்டது.