ADDED : ஆக 16, 2025 12:11 AM
திருப்பூர்; இந்தாண்டில், ஆடி மாதத்தில் ஐந்து வெள்ளிக்கிழமை வந்தது; ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், அம்மன் கோவில்களில், மகா அபிேஷகம், அலங்காரபூஜை, திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் என, களைகட்டியது.
ஐந்தாவது வெள்ளிக்கிழமையான நேற்று, சுதந்திர தினம் என்பதால், கோவில்களில் கூட்டம் அலைமோதியது. திருப்பூர் டவுன் மாரியம்மன் கோவிலில், ஐந்தாவது வாரமாக நேற்று சிறப்பு அலங்கார பூஜையும், அன்னதானமும் நடந்தது. கோட்டை மாரியம்மன் கோவில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், புதுப்பாளையம் மகா மாரியம்மன் கோவிலில், சிறப்பு அலங்காரத்தை தொடர்ந்து, ரூபாய் நோட்டு அலங்காரம் நடந்தது.
பெருமாநல்லுார் கொண்டத்துக்காளியம்மன் கோவில், போலீஸ் லைன் மாரியம்மன் கோவில் உட்பட, அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆடி வெள்ளி விரதம் இருந்த பக்தர்கள், ஐந்தாவது வார பூஜைகளை முடிந்து, விரதத்தை பூர்த்தி செய்தனர். ஆடிவெள்ளி நிறைவு நாளான நேற்று, கோவில்கள், வேப்பிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதிகளவு தீபம் ஏற்றி வைத்து, பக்தர்கள் வழிபட்டனர்.
மேலும், அம்மனுக்கு படைத்த ராகிக்கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. பெண்களுக்கு, கண்ணாடி வளையல், குங்குமம் - மஞ்சள், மஞ்சள் சரடு, பூ ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன.