/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து
/
பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து
ADDED : ஜூலை 27, 2025 07:39 AM

திருப்பூர் : திருப்பூரில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பட்டாசு உட்பட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரை சேர்ந்தவர் முருகேசன், 43. இவர் கொங்கு மெயின் ரோட்டில் ஆர்.வி.எஸ்., ஸ்டோர் என்ற பெயரில் தரைத்தளத்தில் பேன்ஸி கடையும், முதல் தளத்தில் உள்ள ஸ்டாக் ரூமில் பேன்ஸி பொருள், பிளாஸ்டிக் பொருள்கள் வைத்துள்ளார். இதுதவிர, அதே தளத்தில் பட்டாசு வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று அதிகாலை, 5:00 மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. தொடர்ந்து, பலத்த வெடிசத்தத்துடன் தீ மளமளவென எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் வசிக்கும் மக்கள் வீட்டில் இருந்து வெளியே வந்தனர்.
தகவலறிந்து வந்த திருப்பூர் வடக்கு தீயணைப்பு உதவி அலுவலர் வீரராஜ் மற்றும் வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
முதல் தளத்தில் உள்ள பட்டாசு, பிளாஸ்டிக் பொருட்கள் மீது தீ படர்ந்ததால், தீயை அணைக்க தாமதம் ஏற்பட்டது. வடக்கு, தெற்கு என, மூன்று தீயணைப்பு வாகனங்கள் வாயிலாக, தீயணைக்கும் பணி கட்டடத்தை சுற்றி நின்று அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். துரிதமாக செயல்பட்டதால், தரைத்தளத்துக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும், பட்டாசு, பொருட்கள் என, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.
துணை கமிஷனர் ஆய்வு தீ விபத்து குறித்து அறிந்து திருப்பூர் வடக்கு துணை கமிஷனர் பிரவீன் கவுதம், உதவி கமிஷனர்கள் ரமேஷ், தையல் நாயகி, இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர், விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.
கொங்கு மெயின் ரோட்டில், குடியிருப்பு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள கடையில் தரைத்தளத்தில் பேன்ஸி கடையில், முதல் தளத்தில் பட்டாசு, பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. பட்டாசு விற்பனை தொடர்பாக உரிமம் உள்ளதாக முருகேசன், போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், விற்பனை காலத்தை தவிர, மற்ற நேரங்களில் பட்டாசை, பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும். மின்சாதன பொருட் களான பேன், லைட் போன்றவை இருக்கும் இடத்தில் வைத்துள்ளார். பட்டாசு வைக்கப்பட்ட இடம் கிரில் கேட் இருந்த காரணமாக, பட்டாசு வெடித்து வெளியே வராமல், உள்ளேயே வெடித்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மேலும், கடை உரிமையாளர் முருகேசனுக்கும், அவரது அண்ணன் அழகேசன் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு பிரச்னை உள்ளது. சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்னையில் அடிதடி வரை சென்று, நல்லுார் போலீசார் விசாரித்தனர். இதனால், முன்விரோதம் காரணமாக ஏதாவது சதி நடந்துள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.