ADDED : பிப் 02, 2026 04:47 AM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, சிவன்மலை சுப்பிரமணியர்; கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி; அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி; மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி; மாதப் பூர் முத்துக்குமாரசாமி கோவில்களில், தைப்பூச தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம், சுவாமி திருக்கல்யாணமும், வெள்ளையானை வாகனத்தில் திருவீதியுலாவும் நடந்தன. நேற்று, முக்கிய நிகழ்வான, தேரோட்டம் நடைபெற்றது.
அதிகாலையில், சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜையை தொடர்ந்து, ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், மங்கள வாத்திய இசையுடன் தேர்களில் எழுந்தருளினர்.
n சிவன்மலை ஸ்ரீசுப்பிரமணியர் கோவிலில், நேற்று முன்தினம், திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது; நேற்று மாலை, தேர் வடம் பிடித்து, தேரோட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இன்று மாலை, மீண்டும் வடம் பிடித்து, சிறிது துாரம் வரை தேரோட்டம் நடக்கும். நாளை, மீண்டும் தேர்வடம் பிடித்து இழுத்து, நிலையை சென்றடையும்.
மூன்று நாட்களில், 3.10 கி.மீ. துாரமுள்ள மலையை தேர் சுற்றி வருவது சிறப்பு வாய்ந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், தைப்பூச தேர்த்திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.
வரும், 6ம் தேதி பரிவேட்டை, தெப்ப உற்சவம், 7ம் தேதி மகாதரிசனமும், 8ம் தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது. வரும் 10ம் தேதி மஞ்சள்நீர் விழா முடிந்து, சுவாமிகள் மலைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
n மங்கலம், மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவிலில், நேற்று முன்தினம் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை முதல், சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து, பக்தர்கள் காவடி எடுத்தபடி பாதயாத்திரையாக வந்து முருகரை வழிபட்டனர்.
வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நேற்று காலை தேரில் எழுந்தருளினர். விநாயகர் தேர் முன் செல்ல, முருகர் தேர், தேர்வீதிகளை வலம் வந்து நிலை சேர்ந்தது. 'அரோகரா... அரோகரா...' கோஷத்துடன், பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
