/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தைப்பூசத்தேருக்கு கும்மியடித்து கொண்டாட்டம்; கிராமங்களில் பாரம்பரிய ஒற்றுமை விழா
/
தைப்பூசத்தேருக்கு கும்மியடித்து கொண்டாட்டம்; கிராமங்களில் பாரம்பரிய ஒற்றுமை விழா
தைப்பூசத்தேருக்கு கும்மியடித்து கொண்டாட்டம்; கிராமங்களில் பாரம்பரிய ஒற்றுமை விழா
தைப்பூசத்தேருக்கு கும்மியடித்து கொண்டாட்டம்; கிராமங்களில் பாரம்பரிய ஒற்றுமை விழா
ADDED : பிப் 12, 2025 11:13 PM

உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், தைப்பூசத்தை முன்னிட்டு, முருகன் தேர் வரைந்து, தினை மாவு படையலிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.
உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், இன்றளவும் பாரம்பரிய முறையாக, குழந்தைகள், பெண்கள் ஒன்றிணைந்து, தைப்பூசத்திருவிழாவை உற்சாகமாக கொண்டாடுவதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர்.
தை பவுர்ணமிக்கு, ஒன்பது நாட்களுக்கு முன்பு, இந்நிகழ்வு துவங்கும். தினமும் மாலை நேரத்தில், குழந்தைகள் தங்கள் வீடுகளிலிருந்து உணவு எடுத்து வந்து, பொது இடத்தில் கும்மியடித்து, நிலாச்சோறு மாற்றி, அனைத்து உணவுகளையும் ஒன்றாக இணைந்து நிலாச்சோறு உண்பது பாரம்பரிய வழக்கமாக உள்ளது.
அதே போல், தை பூசத்தன்று, ஊர்வலமாக பெண்கள், குழந்தைகள் வீடுகளிலிருந்து தினை, அரிசியால் தயாரித்த மாவிளக்கு, தானியங்கள், இனிப்புகள் எடுத்து ஊர்வலமாக வருகின்றனர்.
கிராமத்தின் பொது இடத்தில் தென்னை ஓலையில் பசும்பந்தல் அமைத்தும், வாழை உள்ளிட்ட பழங்களால் தோரணம் அமைத்து, தைப்பூசத்தேர் வரைத்து, மாவிளக்கு, உணவு, தானியம், முளைப்பாலிகை, உலக்கை, தேங்காய், பழம் வைத்து, சுவாமி முருகனை வணங்கி தேரை சுற்றி வந்து கும்மியடித்தனர்.
கிராமங்களில் வேளாண் வளம், கால்நடை வளம் பெருகவும், இல்லங்களில் அனைத்து செல்வங்களும் பெருகவும், எதிர்வரும் கோடையை சமாளிக்க அரச மரம், வேப்ப மரம் என கிராமிய பாடல்களுடன் கும்மியடித்து ஒற்றுமையை எற்படுத்தும் வகையிலும், உடுமலை பழநியாண்டவர், போடிபட்டி, தளி, ராகல்பாவி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கிராம மக்கள் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஜல்லிபட்டியிலும் விழா
உடுமலை ஜல்லிபட்டியில் பாரம்பரிய முறைப்படி, தேர் வரைந்து பொங்கலிட்டு தைப்பூசத்தை கிராம மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
வீடுகளிலும், பொது இடங்களிலும், திருத்தேர் வரைந்து, வண்ண கோலப்பொடிகளால், அலங்கரித்து, முருகப்பெருமானுக்கு பொங்கலிட்டு, சிறப்பு பூஜை செய்கின்றனர்.
அவ்வகையில், ஜல்லிபட்டி கிழக்கு வீதியில், 75ம் ஆண்டு தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது. கிராம பொது இடத்தில், திருத்தேர் வரைந்து, வண்ண கோலப்பொடிகளால் அலங்கரித்தனர்.
பின்னர், விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக மாவிளக்கு எடுத்து வந்தனர். பாரம்பரியமாக கொண்டாடப்படும் இவ்விழாவில் கிராம மக்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருள்மிகு குழந்தை வேலாயுதசுவாமி பழநி பாத யாத்திரை குழு மற்றும் ஜோதிநகர், பி.கே.எஸ்., காலனி, குறிஞ்சி நகர், காமராஜ் நகர் பொதுமக்கள் சார்பில், தைப்பூச திருவிழா நடந்தது.
பி.கே.எஸ்., காலனி பக்தர்கள் மாலை, 4:30 மணிக்கு பாத யாத்திரை புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இப்பகுதியில் இருந்து, விநாயகர் கோவிலில் வழிபாடு செய்து, தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் பாத யாத்திரையை துவங்கினர்.
பொள்ளாச்சி அருகே, ஜமீன் முத்துார் பாலமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பாலமுருகன் கோவில் பழநி பாத யாத்திரை குழுவினர், 11ம் ஆண்டாக மயில் காவடிகள் மற்றும் வேல் காவடி எடுத்து, பாத யாத்திரை சென்றனர்.
- நிருபர் குழு -